Marina Beach Entry Fee: மெரினா பீச் செல்ல கட்டணம் இல்லை.. சென்னை மாநகராட்சி திட்டவட்டம்..!
Chennai Corporation: மெரினா கடற்கரைக்கு கட்டணம் வசூலிப்பு குறித்த வதந்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். நீலக்கொடித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளுக்கான செலவினை மாநகராட்சியே ஏற்கும் எனவும், பொதுமக்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் கடற்கரை மேம்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவம் வழங்கப்படும்.

மெரினா பீச்
சென்னை, ஏப்ரல் 15: மெரினா கடற்கரைக்கு (Marina Beach) செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் (Chennai Corporation Commissioner Kumaragurubaran) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்திதான் பார்வையிட முடியும். கட்டணமின்றி பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தது. இப்படி பரவிய வதந்திக்கு சென்னை மாநகராட்சி தற்போது முடிவு கொண்டு வந்துள்ளது.
மெரினா பீச்:
சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். இங்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இதில் உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை அடக்கம். மேலும், தங்க இடமில்லாத மக்கள் பொதுவாக மெரினா பீச்சில் உள்ள நிழல் பகுதிகளில் தங்குவதையும் நாம் காணலாம். அதேபோல், இரவு நேரங்களில் ஒரு சிலர் மெரினா பீச்சில் பந்து இறங்குவதையும் கண்டுள்ளோம். இப்படி எந்த கட்டணமும் இல்லாமலும் மெரினா பீச்சிற்கு வந்து செல்லும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று (15.04.2025) காலை முதல் மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மக்கள் கட்டணம் செலுத்திதான் செல்ல வேண்டும் என்ற தகவல் பரவியது. இதை கேட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கு காரணம் நீலக்கொடி கடற்கரை திட்டம்தான் என்று கூறப்பட்டது. அதாவது நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ், மெரினா பீச் புணரமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ. 6 கோடி செலவில் மெரினா பீச்சில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட இருந்தது.
நீலக்கொடி திட்டம் என்றால் என்ன..?
கடற்கரைகளுக்கான நீலக்கொடி திட்டம் சர்வதேச லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்த திட்டம் முதல் முதலாக 1985ம் ஆண்டில் பிரான்சில் தொடங்கப்பட்டு, 1987 முதல் ஐரோப்பாவிலும், 2001 முதல் ஐரோப்பாவிற்கு வெளியேயும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மெரினாவில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தை 6 கோடி செலவில் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்தது.
சென்னையின் அடையாள சின்னமான கலங்கரை விளக்கத்திலிருந்து தீவு மைதானம் வரை 4 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மறுமேம்பாட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அலங்கார தெரு விளக்குகள், நிலப்பரப்பு நிறுவல்கள், சிற்பக் கூடங்கள், நீர் அம்சங்கள் மற்றும் கலாச்சார ஒன்றுகூடல் மண்டலங்கள் போன்ற பல்வேறு மேம்பாடுகள் உள்ளன. இந்தநிலையில்தான், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மெரினா பீச் கட்டணம் குறித்து பேசுகையில், “ நீலக் கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. மெரினா பீச் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை சென்னை மாநகராட்சியே ஈடு செய்யும்” என்று தெரிவித்தார்.