மே 8-ல் மதுரை சித்திரை திருவிழா.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
Madurai Chithirai Thiruvizha | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மே 8, 2025 அன்று தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில், இந்த ஆண்டும் பக்தர்கள் கூட்டம் கலைகட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
மதுரை, ஏப்ரல் 08 : உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா (Madurai Chithirai Thiruvizha) மே 8, 2025 அன்று தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 8, 2025 அன்று தொடங்கும் திருவிழா, மே 17, 2025 உடன் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12, 2025 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா
மதுரைக்கு எப்படி தூங்கா நகரம் என்ற ஒரு சிறப்பு உள்ளதோ அதேபோல சிறப்பை கொண்டது தான் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில். இது மதுரையின் முக்கிய அடையாளமாக காணப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் நிலையில், தமிழ்நாடு மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரசித்தி பெற்ற நிகழ்வு தான் சித்திரை திருவிழா. மதுரை சித்திரை திருவிழா மதுரைக்கு மட்டுமன்றி, தென் மாவட்டங்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தென் மாவட்டங்களில் அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழாவாக இது உள்ள நிலையில், மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த திருவிழாவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மதுரை மக்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்துவிட்ட சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படும் மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட நிகழ்வாக உள்ளன. இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழா அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மே 8, 2025 அன்று தொடங்கும் சித்திரை திருவிழா மே 17, 2025 அன்று முடிவடைய உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12, 2025 அன்று நடைபெற உள்ளது.