ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

Plastic Ban on Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

கொடைக்கானல்

Published: 

16 Apr 2025 18:44 PM

கோடை விடுமுறை (Summer Holidays) துவங்கியுள்ள நிலையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மலைகளின் அரசி எனப்படும் ஊட்டியும் (Ooty), மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலும் (Kodaikanal) பிரபலமான சுற்றுலா தலமாக இருந்துவருகிறது. அங்கே பொதுமக்கள் கணக்கில்லாமல் குவிவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மக்கள் வரவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல், மே 2025 ஆகிய இரண்டு மாதங்களில் கொடைக்கானலுக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து தான் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர் என்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வைத்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா செல்பவர்கள் அந்த இடத்தை தூய்மையாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் வருகையும் பாதிக்கும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பசுமை நிறைந்த பகுதியில் நாம் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டுவருகிறது. இந்த நிலையில் இதனை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வழங்கியிருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

அதன் படி சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்திருக்கிறது. அதன் படி குடி நீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களை இனி அங்கு பயன்படுத்த முடியாது. மீறி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பையை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சுற்றுலா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

கடந்த மார்ச் 14, 2025 அன்று ஊட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தியிருந்தது. அதன் படி ஊட்டியில் வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்கலாம் எனவும், கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம் எனவும் அறுவுறுத்தியிருந்தது. மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் இருந்து தவிர்க்குமாறும் அறுவுறுத்தியிருந்தது. மேலும் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு எந்த தடையும் விதிக்க தேவையில்லை எனவும் நீதிமன்றம் அறுவுறுத்தியிருந்தது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு சமூகப் பொறுப்பும் கூட. எனவே இதுபோன்ற பசுமை பகுதிகளை நம் மகிழ்ச்சிக்காக அழிக்காமல், பாதுகாத்து வைத்து, வரும் தலைமுறைக்கும் அதையே அனுபவிக்க விடுவோம்.