Annamalai: மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்! பஹல்காம் தாக்குதல் குறித்து அண்ணாமலை பேச்சு!
Pahalgam Terror Attack: பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அண்ணாமலை கண்டித்துள்ளார். அப்பாவி மக்கள் பலியான இந்தக் கோழைத்தனமான செயலைக் கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் மோடி உடனடியாக இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை, சமூக அமைதியைப் பேணவும், அச்சமின்றி காஷ்மீர் செல்லவும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அண்ணாமலை
சென்னை, ஏப்ரல் 23: ஐம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று (23.04.2025) நடந்த தாக்குதல் (Pahalgam Terror Attack) தொடர்பாக ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது. மீட்புக்கு பிறகு பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தை நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் 2025 ஏப்ரல் 1 முதல் 7 இந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். பயங்கரவாதிகள் இதை பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் அண்ணாமலை..?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சென்னை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த அண்ணாமலை கூறியதாவது, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அங்கு பயங்கரவாதிகளால் உயிரிழந்த இராணுவ வீரர் உள்பட அனைவரும் நடுத்தர மக்கள். இந்தநேரத்தில், விடுமுறையை கொண்டாடுவதற்காக காஷ்மீர் சென்றவர்கள். திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதன்மூலம், ஒரு மனிதன் இப்படியெல்லாம் செய்வானா என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி இருக்கிறது. நான் எல்லா மதமும் ஒரே மதம் என்று நினைக்கக்கூடியவன். இருந்தாலும் கூட, வரக்கூடிய பயங்கரவாதிகள் அப்படி நினைக்கவில்லை.
நீ வந்து குரானில் இருந்து 2 வரிகளை சொல்லு! உன் பெயர் என்ன..? நீ ஹிந்துவா..? முஸ்லீமா..? என்று இப்படியெல்லாம் கேட்டு 26 அப்பாவி மக்களை படுக்கொலை செய்திருக்கிறார்கள். 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பிரதமர் மோடி ஒரே நாளில் வந்துவிட்டார். இதேநேரத்தில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸூம் இந்தியாவில் இருக்கிறார். எனவே, இந்நேரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
அண்ணாமலை பிரஸ் மீட்:
அப்பாவி மக்களை படுகொ** செய்த இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு நாம் பயப்பட கூடாது மத்திய அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் – தலைவர் pic.twitter.com/38EoOnDMa3
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 23, 2025
இதை கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட, மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும். எனவே, இந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளை முன்வைத்து, ஆக்ரோஷமான பதிவுகளை போடுகிறார்கள். இது எல்லாம் தேவையில்லாதது. மத்திய அரசு தகுந்த நேரத்தில் என்ன செய்யுமோ, அதை நிச்சயம் செய்வார்கள். கோழைத்தனமாக பயங்கரவாத தாக்குதல் காரணமாக யாரும் காஷ்மீர் செல்லாமல் இருக்கக்கூடாது. காஷ்மீருக்கு யார் போக வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் போக வேண்டும்.
பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ பொறுத்தவரை இந்தியாவில் அமைதி நிலவக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதற்காகவே, தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.” என்று தெரிவித்தார்.