மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்.. மநீம துணை தலைவர் சொன்ன முக்கிய தகவல்!
kamal haasan : தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களின் பதவிக்காலம் 2025 ஜூலையில் முடிவடைகிறது. இந்த மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தேர்வு செய்யப்படுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, அக்கட்சி துணை தலைவர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 15: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (kamal haasan) மாநிலங்களவை எம்.பியாக (Rajya Sabha Election) தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சி துணை தலைவர் தங்கவேல் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பலப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களில் 6 இடங்களுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது.
மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்
அதாவது, 6 மாநிலங்களவை பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், விரைவில் இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெறலாம். இதில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள எம்.எம். அப்துல்லா, எம்.சண்முகம், பி.வில்சன் ஆகியோரிடம் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது.
இவர்களை தவிர, அதிமுக எம்.பி என்.சந்திரசேகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவில் மாநிலங்களவைக்கு சென்ற அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதில், தமிழக சட்டப்பேரவையில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவு 4 மாநிலங்களவை இடங்களை பெற முடியும். அதிமுகவுக்கு ஒரு இடமும், மீதமுள்ள ஒரு இடத்தை பாஜகவின் உதவியோடு 2வது மாநிலங்களவை உறுப்பினரையும் அதிமுக பெற முடியும்.
இதில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதாவது, 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனால், திமுக ஆதரவில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகுவது உறுதியாகிவிட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கமல்ஹசான் அண்மையில் சந்தித்தார்.
மநீம துணை தலைவர் சொன்ன முக்கிய தகவல்
அதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எமது குரல் ஒலிக்கும் என கமல்ஹசான் சூசகமாக கூறினார். இதன் மூலம் கமல்ஹாசன் எம்பியாகுவது உறுதி ஆனது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேலு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கவேலு, ” மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார். இது எங்களின் விருப்பம் என தலைவரிடமே கூறியுள்ளோம். இதற்கு அவரும் சரி என்று கூறியுள்ளார். தற்போது தலைவர் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர் 2025 ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை வருகிறார்.
அதன்பிறகு இதுகுறித்து முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராவார்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.