Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்.. முதலமைச்சர் அறிவிப்பு!
Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தி பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற முடியாமல் உள்ளவர்கள் ஜூன் மாதம் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 25 : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 25, 2025) தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) பேசிய அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, தகுதி உள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றும் (ஏப்ரல் 25, 2025) வழக்கம் போல சட்டப்பேரவை தொடங்கியது. அதன்படி சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயம் அவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் – முதல்வர்
தமிழகத்தில் சுமார் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் 4 ஆம் கட்டமாக நடைபெறுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
பெண்களுக்கு பயனளிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15, 2025 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1 கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது சுமார் 1.14 கோடி மகளிர் மாதந்தோறும் இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.