கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.. திட்டவட்டமாக மறுத்த ஜெயக்குமார்!
Jayakumar Denies Resignation Rumor | 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து களம் காண உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்தால் கட்சியில் இருந்து தான் விலகுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 14 : பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP – Bharatiya Janata Party) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhgam) கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று தான் எப்போதும் கூறவில்லை என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஏப்ரல் 14, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தான் சொல்லாத ஒரு விஷயத்தை வேண்டும் என்ற திட்டமிட்டு பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் அதிமுக – பாஜக
2021 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதிமுக கூட்டணி தோவியை தழுவியது. தேர்தலுக்கு பிறகு சில நாட்கள் நீடித்த பாஜக – அதிமுக கூட்டணி அதற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக முறிவடைந்தது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்ப்பார்ப்பின் படியே 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக கூட்டணியுடன் களம் காண உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி உடைவதற்கு முன்பாக இரண்டு கட்சி உறுப்பினர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அறிவித்திருந்தார். அவர் சொன்னபடியே தற்போது பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் கூறாத விஷயங்கள் போலியாக திட்டமிட்டு வேண்டுமென்றே பரப்ப படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை – திட்டவட்டமாக மறுத்த ஜெயக்குமார்
இன்று (ஏப்ரல் 14, 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் தான் பதவி விலகுவேன் என கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார். எந்த நேரத்திலும் நான் அப்படி சொல்லவில்லை. என்னை அடையாளம் காட்டியது அதிமுகவும் ஜெயலலிதாவும் தான். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நின்றது கிடையாது என் குடும்பம். உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.