“உயிர் பயமே வந்துவிட்டது” காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய பயணிகள் பேட்டி!
Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் 19 பயணிகள் சென்னை வந்தடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக 50 பேர் காஷ்மீரில் இருந்து சென்னை வர உள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கை அருகில் சென்றபோது, தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்ததால் உயிர் தப்பியதாக பேட்டி அளித்துள்ளனர்.

சென்னை, ஏப்ரல் 24: பஹல்காம் தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து, காஷ்மீரில் இருந்து டெல்லி சென்ற தமிழர்களில் 19 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பைசரன் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றபோது, சில அடி தூரத்தில் தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்ததால் உயிர் தப்பியதாக அவர்கள் பேட்டி அளித்துள்ளனர். உலகளவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீர் தாக்குதல்
இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரபல சுற்றுலா தலத்தில் அப்பாவி மக்களை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பலரும் காயம் அடைந்தனர். அதே நேரத்தில், பயங்கரவாத தாக்குதலில் இருந்து சுற்றுலா பயணிகள் பலரும் தப்பியும் உள்ளனர். காஷ்மீருக்கு வந்த சுற்றுலா பயணிகள் தற்போது பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழக மக்கள் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். டெல்லி இருந்து விமானம் மூலம் 19 பேர் சென்னை வந்தடைந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த 14 பேரும், சென்னையைச் சேர்ந்த 5 பேரும் வந்தடைந்துள்ளனர். அவர்கள் அதிகாலை 2.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பத்திரமாக தமிழகம் வந்தடைந்த 19 பேர்
Chennai: After a terrorist attack in Jammu and Kashmir killed 27 Indians, 68 tourists from Madurai were safely evacuated by the Tamil Nadu government. They returned via Delhi to Chennai and expressed gratitude for the swift and secure rescue operation pic.twitter.com/6fZ6MkRP3F
— IANS (@ians_india) April 24, 2025
இவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது, “நாங்கள் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சென்றடைந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும் இருந்திருப்போம். எங்களுக்கு மறுபிறவி கிடைத்தது போல் உணர்கிறோம்.
தாக்குதல் நடந்த அந்த நாளில் பஹல்காமில் உள்ள பள்ளத்தாக்கைப் பார்வையிட நாங்கள் திட்டுமிட்டோம். ஆனால் அங்கு செல்ல தாமதமானது. இதனால், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நாங்கள் பள்ளத்தாக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறினார்கள். இதனால் பாதுகாப்பாக திரும்பினோம்.
தாங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்த மத்திய மற்றும் மாநில அரசுகள், ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். வாழ்க்கையில் தங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டதைப் போல நாங்கள் உணர்கிறோம். அரசுக்கு நன்றி” என்றனர்.
இதற்கிடையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.