சித்திரை திருவிழாவுக்கு மதுரைக்கு வாங்க… வெளிநாட்டினருக்கும் அழைப்பு
Madurai Chithirai festival: மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் இணைந்து நடத்தும் சித்திரைத் திருவிழா, தமிழகத்தின் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வைக் காண, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். இந்த ஆண்டில் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவுக்கு வெளிநாட்டவருக்கு அழைப்பு
மதுரை ஏப்ரல் 13: மதுரை மீனாட்சியம்மன் கோவில் (Madurai Meenakshi Amman Temple) சித்திரைத் திருவிழா (Chithirai Festival) 2025 ஏப்ரல் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 2025 மே 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 30 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. விழாவைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா – பக்தி, பண்பாடு, பெருமை
தமிழகத்தின் திருவிழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றதாக மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இது மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அழகர் கோயிலும் இணைந்து நடத்தும் சிறப்பு விழாவாகும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்கள் கூட இதை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல்
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண, மாட்டுவண்டிகளில் மற்றும் கால்நடையாக மக்கள் மதுரையை நோக்கி பெருந்திரளாகச் செல்வது வழக்கம். கிட்டத்தட்ட 10 நாட்கள் அவர்கள் வைகை ஆற்றங்கரையோரங்களில் தங்கி விழாவைக் கண்டு ரசிக்கிறார்கள். இதனால், அந்த நாட்களில் வைகை ஆற்றங்கரை மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படுகிறது.
பொதுமக்களுக்கு வசதிகள்
இவ்வாண்டு சித்திரைத் திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாக மதுரை மாநகராட்சி கணித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும், 3,500 தூய்மைப் பணியாளர்களால் 100 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வது சவாலாக இருக்கிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாரம்பரிய விழா, உலகளாவிய அளவில் மேலும் பரவ வாய்ப்புள்ளது.
மதுரை நகரம் முழுவதும் விழாக்கோலத்தில் மிளிர்கிறது
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய சிறப்பாக, இந்துக்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் இவ்விழாவில் பங்கேற்று, சமுதாய ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார்கள். பக்தர்களுக்காக மூன்று வேளை சாப்பாடு மற்றும் பிரசாதங்களை தன்னார்வ அமைப்புகள் மற்றும் பக்தர்கள் வழங்குகின்றனர். மேலும், மண்டக படிகளில் தினமும் மூன்று வேளையும் அன்னதானம் நடத்தப்படுகிறது.
கோடை காலத்தில் நடைபெறும் விழாவாக இருப்பதால், மதுரை முழுவதும் தாகத்தை தணிக்க ஜூஸ், நீர்மோர் போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவைப் போல், தமிழகத்தின் பெரும் பக்தி மற்றும் பாரம்பரிய விழாவாக சித்திரைத் திருவிழா பரவலாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது மதுரை நகரம் முழுவதும் விழாக்கோலத்தில் மிளிர்கிறது.