கட்சி பதவியில் நீடிக்கும் துரை வைகோ? மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நடந்த சம்பவம்!
MDMK Durai Vaiko: சென்னையில் 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான செய்திக்குறிப்பில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் துரை வைகோ கட்சி பொறுப்பில் தொடர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதிமுக துரை வைகோ
சென்னை, ஏப்ரல் 20: சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கட்சி அளித்த செய்தியில் முதன்மை செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி பதவியில் நீடிக்கும் துரை வைகோ?
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதாக அறிவிப்பை வெளியிட்டார். கடந்த சில தினங்களாகவே, துரை வைகோ ஆதரவாளர்களுக்கும், மல்லை சத்யாவின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இதனால், துரை வைகோவுக்கும், மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக, துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதில் இருந்தே, மல்லை சத்யா அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதனால், இருதரப்பு ஆதரவாளர்களுக்கு மோதல் வெடித்தது.
இதற்கிடையில், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ, வைகோவிடம் முறையிட்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கு வைகோ மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இந்த நிலையில் தான், துரை வைகோ கட்சி பொறுப்பை துறந்தார்.
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நடந்த சம்பவம்
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று சென்னை மதிமுக தலைமையகத்தில் நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், ஆளுநர் ரவியை கண்டித்தும், அவரை நீக்க கோரியும் ஏப்ரல் 26ஆம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வக்ஃப் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் 2025 ஏப்ரல் 26ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மான செய்தியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், துரை வைகோ கட்சி பொறுப்பில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
மதிமுக கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துரை வைகோ, ” வைகோ தான் மதிமுக.. மதிமுக தான் வைகோ.. கட்சியை இழிவுப்படுத்தக் கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.