அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? குழந்தைகளின் நலனுக்கு அபாயம்

Food Safety Issues in Tamil Nadu Anganwadi Centres: தமிழகத்தின் 54,439 அங்கன்வாடிகளில் 27% மையங்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) பதிவின்றி செயல்படுவதால், குழந்தைகளின் உடல்நலத்திற்கு அபாயம் ஏற்படுகிறது என சமீபத்திய தணிக்கையறிக்கை எச்சரிக்கிறது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வணிகர் தரவுகள் இல்லை; மேலும், 2023ல் 56,149 பேர் பதிவு புதுப்பிக்காமல் வணிகம் செய்து வருகின்றனர்.

அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? குழந்தைகளின் நலனுக்கு அபாயம்

அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி

Published: 

30 Apr 2025 09:56 AM

தமிழ்நாடு ஏப்ரல் 30: தமிழகத்தில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் 27% இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (Food Safety and Standards Authority of India) பதிவு இல்லாமல் செயல்படுகிறது, இது குழந்தைகளின் உடல்நலத்திற்கு அபாயமாக இருக்கலாம். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தேவையான வணிகர் தகவல்கள் இல்லை. 2023ல் 56,149 பேர் பதிவு புதுப்பிக்காமல் வணிகம் செய்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் துறைகளிடையே ஒருங்கிணைப்பு குறைபாடுகள் உள்ளன. குளிர்சாதன வசதி மற்றும் சேமிப்புக் கிடங்குகள் பல மாவட்டங்களில் இல்லாத நிலை. புற்றுநோயாளிகளுக்கான திட்டங்கள் தாமதமடைந்து, கூடுதல் செலவுகளும் ஏற்பட்டுள்ளன.

அங்கன்வாடி மையங்களில் உணவு தர சிக்கல்

தமிழகத்தில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் 27 சதவீதமானவை உணவு தர நியமன அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐயில் (FSSAI) பதிவு செய்யப்படவில்லை. இதனால், அந்த மையங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக இருக்கக்கூடும் என்பதால் குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய தணிக்கைத் துறையின் சமீபத்திய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தரவுகள் இல்லை

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நியமன சட்டத்தின் கீழ் 1.29 லட்சம் உரிமம் பெற்ற மற்றும் 5.59 லட்சம் பதிவு பெற்ற உணவு வணிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் இந்த வணிகர்களின் முழுமையான தகவல்கள் இல்லை. இது தரமற்ற உணவுகள் சந்தையில் விற்பனைக்கு வருவதற்கான காரணமாகும்.

உரிய பதிவு இல்லாமல் வணிகம்: 56,149 பதிவை புதுப்பிக்கவில்லை

உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி வருடத்திற்கு ஒரு முறை பதிவு புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், 2023 ஆம் ஆண்டு 56,149 பேர் பதிவை புதுப்பிக்காமலே வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குறைவு, சேமிப்பு வசதி இல்லாமை

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி, ஜிஎஸ்டி துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. குளிர்சாதன வசதியுடன் கூடிய மாதிரி உணவு மேலாண்மை அமைப்பு கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் செயல்படவில்லை. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களிலும் சேமிப்புக் கிடங்குகள் மோசமான நிலையில் உள்ளன.

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை வசதி தேவை

தேசிய சுகாதார இயக்கம் ரூ. 57 கோடியை மூன்று தவணைகளில் தமிழக மருத்துவ சேவை கழகத்துக்கு வழங்கியுள்ளது. இது 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான டெலிகோபால்ட் இயந்திரங்கள் மற்றும் நான்கு புதிய மையங்களை உருவாக்கும் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்காக ரூ. 3 கோடிக்கு கோபால்ட் தெரபி யூனிட் வாங்க அரசின் அனுமதி கிடைத்தது. ஆனால், திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் காரணமாக சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை தொடங்கப்படவில்லை. இதனால், ரூ. 46.21 லட்சம் கூடுதல் செலவாகியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.