விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Rajendra Balaji Invites Vijay to AIADMK Alliance | 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி வரும் நிலையில், விஜய் உள்ளிட்ட திமுகவை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய்

Updated On: 

27 Apr 2025 17:23 PM

சென்னை, ஏப்ரல் 27 : திராவிட முன்னேற்றக் கழகத்தை (DMK – Dravida Munnetra Kazhagam) எதிர்க்கும் எந்த கட்சியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் சேரலாம் என்றும், தமிழக வெற்றி கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் (TVK Booth Committee Meeting) நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியுள்ளார். இந்த நிலையில், கூட்டணி குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய்யின் தவெக

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் களம் காணுவதற்காக திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தவெக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு முன்னாள் கட்சியை கட்டமைக்கும் வகையில் மாவட்ட பொருப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட தவெக தற்போது பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தி வருகிறது. கோயம்புத்தூரில் ஏப்ரல் 26, 2025 மற்றும் ஏப்ரல் 27, 2025 என இரண்டு நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தவெக பூத் கமிட்டி கூட்டத்திற்கு திரண்ட தொண்டர்கள்

விஜய்க்கு அழைப்பு விடுத்த ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், விஜய் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தவெக தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன், விஜய்யின் பேச்சை கேட்பேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் அதிமுகவில் இணையலாம். தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியுள்ளார். மேலும், விஜய் நடத்துவது பூத் கமிட்டி அல்ல, அது ஒரு பொதுக்கூட்டம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.