டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்.. அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

Edappadi Palaniswami Alleges 1000 Crore rupees TASMAC Scam | டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்கதுறை குற்றம் சாட்டியுள்ளது குறித்து எந்த வித விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், அமலாக்கத்துறை கூறியது உண்மை தானோ என எண்ண தோன்றுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்.. அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிசாமி

Published: 

22 Apr 2025 14:53 PM

சென்னை, ஏப்ரல் 22 : டாஸ்மாக் (TASMAC) முறைகேடு குறித்து தமிழக அரசோ, துரை சார்ந்த அமைச்சர் சார்பிலோ இதுவரை விளக்கம் அளிக்கப்படாத நிலையில், ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உண்மை தானோ என எண்ண தோன்றுகிறது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 22, 2025) மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடத்திருப்பதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கை குறித்து, இதுவரையில் தமிழக அரசின் சார்பிலோ, துறை சார்ந்த அமைச்சர் சார்பிலோ இதுவரை விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்காத போது, ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உணைமை தானே என எண்ண தோன்றுகிறது என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக்கில் ஒரு மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி வரை ஊழல் நடக்கிறது. அதுவே 12 மாதங்களுக்கு ரூ.54,000 கோடி வரை ஊழல் செய்கிறார்கள் என அவர் சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.