மதுரை மக்களே ரெடியா… விரைவில் மின்சார பேருந்துகள்.. தேதி குறித்த அமைச்சர்!
Madurai Electric Buses : மதுரையில் 2025 ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் மின்சார பேருந்துகள் தொடங்கி வைத்த பிறகு, மதுரையிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மதுரை, ஏப்ரல் 20: மதுரை மாவட்டத்தில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மின்சார பேருந்துகள் (Madurai Electric Buses) இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளது. சென்னையில் 2025 ஜூன் மாதம் மின்சார பேருந்துகள் தொடங்கப்படும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மதுரை மக்கள் இனி பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்று கூறப்படுகிறது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக முக்கிய நகராக இருப்பது மதுரை. மதுரையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மதுரை மக்களே ரெடியா
அதில் ஒன்று பேருந்து சேவை. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிய பேருந்துகளை தமிழக அரசு தொடங்கி வைத்து வருகிறது. சீரான பேருந்து சேவையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மாநகர பேருந்துகளையும் அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் அண்மையில் தாழ்தள பேருந்துகள் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மின்சார பேருந்துகளையும் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இகுறித்து முக்கிய அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் 20ஆம் தேதி மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் 32 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கம்
மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் உத்தரவின்படி, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் அண்ணன் @pmoorthy21 அவர்கள், மாண்புமிகு… pic.twitter.com/etInjtrmi4
— Sivasankar SS (@sivasankar1ss) April 19, 2025
2025 ஜூன் மாதம் சென்னையில் மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு 2025 ஆகஸ்ட் மாதம் மின்சார பேருந்துகள் மதுரையில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 500 மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மின்சார பேருந்துகள் இயக்குவது மூலம் மாசுபாட்டைக் குறைக்கவும், பசுமை போக்குவரத்து முயற்சியின் நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சென்னையில் 100 மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2025 ஜூன் மாதத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தொண்டியார்பேட்டை ஆகிய ஐந்து பேருந்து முனையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த தாழ்தளப் பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து மக்களும் எளிதாக ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.