திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருங்கள்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami warns DMK Coalition Parties | தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சென்னை, ஏப்ரல் 08 : ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும், திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – Anaithindhiya Anna Dravida Munnetra Kazhagam) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 24, 2025 முதல் துறை ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 08, 2025) கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாகதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த அதிமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அது குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, தொடர்ந்து எங்களை பேசுவதற்கு அனுமதிக்காமல் வேறு கட்சித் தலைவர்கள் மட்டுமே பேச அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, இதையொட்டியே சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்ததாக விளக்கம் அளித்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது அதனை நேரலை செய்கின்றனர். ஆனால் எதிர்கட்சிகள் கேள்வி கேட்கும் போது கேள்விகள் நேரலை செய்யாமல் அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதிலை மட்டுமே நேரலை செய்கின்றனர். கேள்வியே தெரியாமல் பதிலை மட்டும் நேரலை செய்தால் அது எப்படி பொதுமக்களுக்கு புரியும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருங்கள் – எச்சரித்த ஈபிஎஸ்
தொடர்ந்து பேசிய அவர், திமுகவை போல கூட்டணி கட்சிகளை அடிமையாக வைத்திருக்கும் கட்சி அதிமுக இல்லை என்றும், ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். கட்சிகள் தனித்துவமாக செயல்பட்டால் தான் வளர முடியும் என கூறியுள்ள அவர், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எந்த காலத்திலும் வளராது என்று கூறியுள்ளார்.
எல்லோரும் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர். காலப்போக்கில் இந்த கூட்டணி கட்சிகள் காற்றோடு, காற்றாக கரைந்து போகும். எனவே திமுக கூட்டனி கட்சிகள் உஷாராக இருங்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.