டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிசாமி!

Edappadi K Palaniswami: அதிமுக தற்பொழுது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய நடவடிக்கை கூட்டணிக்கான அடித்தளமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிசாமி!

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

Published: 

16 Apr 2025 21:18 PM

அதிமுகவில்(ADMK) துணைப் பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் (TTV Dinakaran), 2017 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, 2018 மார்ச்சில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’  என்ற பெயரில் தனி கட்சி தொடங்கினார். அந்த கட்சியின் கொடியாக, அதிமுகவின் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைப் போலவே உருவாக்கப்பட்ட கொடி மற்றும் ஜெயலலிதாவின் (Jayalalitha) புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் மற்றும் அதிமுகவின் நிறங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கை திரும்ப பெறும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைத்தது.

இது அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய செயல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவோ அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைக்கும் விதமாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இது தமிழக அரசியலில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கூட்டணி குறித்து மறைமுகமாக பேசிய எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எங்கள் கூட்டணி வலுவானதா? வலு இல்லாத கூட்டணியா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும். ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் ஆளும் திமுக கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட நாங்கள் முயற்சி செய்தோம். அதன் முதல்கட்டமாக பாஜக எங்களோடு இணைந்திருக்கிறது. தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கின்றன. என்று பேசியிருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றிருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக எதிர்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளிவந்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தலைவராக நயினார் பொறுப்பேற்றுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பது பேசுபொருளானது.