ரூ.1,000 கோடி ஊழல்… டாஸ்மாக் இயக்குநர், மேலாளர்களுக்கு ED சம்மன்.. தீவிர விசாரணை!
ED Summons Tasmac : ரூ,1000 கோடி ஊழல் தொடர்பாக டாஸ்மாக் தலைமை நிர்வாக இயக்குநர் விசாகன், பொது மேலாளர்கள் சங்கீதா, ராமதுரைமுருகன் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் கிடைத்த ஏழு நாட்களுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 25: டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன் (ED Summons Tasmac) அனுப்பியுள்ளது. அதாவது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள எழும்பூரில் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் அலுவலகத்தில் 2025 ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ரூ.1,000 கோடி ஊழல்
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. மேலும், சோதனையின் முடிவில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறியது.
இதற்கான விசாரணையும் அமலாக்கத்துறை தொடங்கியது. இதற்கிடையில், டாஸ்மாக்கில் நடந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல கட்ட விசாரணை நடந்தது. இறுதியாக, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டாஸ்மாக் இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன்
அதாவது, டாஸ்மாக் சார்பில் தொடர்ந்து மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் இல்லை என்று கூறி மனுக்கள் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனால், அமலாக்கத்துறை இந்த வழக்கில் தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் மற்றும் பொது மேலாளர்கள் எஸ். சங்கீதா மற்றும் டி. ராமதுரைமுருகன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன் கிடைத்த ஏழு நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளிடம் வரும் நாட்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும். ரூ.1,000 கோடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தும்.
வரும் நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, செந்தில் பாலாஜி கடும் சிக்கலில் உள்ளார். அதாவது, சட்டவிரோத பண மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2025 ஏப்ரல் 24ஆம் தேதியான நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதாவது, பதவி விலகாவிட்டால், ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தது. எனவே, அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பதை முடிவு எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இப்படி இருக்கக் கூடிய சூழலில், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.