Durai Vaiko: ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன்..? மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விளக்கம்!
MDMK Crisis Averted: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா திரும்பப் பெறப்பட்டது. கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் ராஜினாமா செய்தார். ஆனால், வைகோ மற்றும் மல்லை சத்யா இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இருவரும் சமரசம் செய்து கொண்டு, கட்சியின் ஒற்றுமைக்காக ராஜினாமா வாபஸ் பெறப்பட்டது. இதனால் மதிமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் சீராக நடைபெறும்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ
சென்னை, ஏப்ரல் 20: மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ (Durai Vaiko) திரும்ப பெற்றார். இதையடுத்து, மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ தொடர்ந்து தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) தெரிவிக்கையில், “துரை வைகோ மற்றும் மல்லை சத்யா மனம் திறந்து பேசிய பிறகு, இருவரும் சமரசம் ஆனார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி, கைக்குலுக்கி நாங்கள் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுவோம் என்ற உறுதியை கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன்..?
ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்லா ஜனநாயக இயக்கத்திலும் மாறுப்பட்ட கருத்துகள் இருக்கலாம். சில நேரங்களில் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளுக்கு இடையே குழப்பங்கள், கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான். எதை தவிர்க்க முடியாது. அதுபோல், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட சில பதிவுகளின் அடிப்படையில் கட்சிக்கும் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் சில நிகழ்வுகள் நடந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தாங்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்பதை மனம்விட்டு பேசினார்கள்.
இதில், மல்லை சத்யா, பொருளாளர் உள்ளிட்ட பலரும் பேசினர். இறுதி முடிவில் இயக்க நலன்தான் முக்கியம் என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பது மதிமுக. மதிமுகவின் பயணம் இன்னும் சீராகவும், சிறப்பாகவும் தொடர வேண்டும் என்பதற்காக பேசி முடிவெடுத்தோம். சகோதரர் மல்லை சத்யாவை பொறுத்தவரை, அவர் மீது நான் முதற்கொண்டு சில நிர்வாகிகள் குற்றம் சாட்டினோம். அதற்கு, மல்லை சத்யா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இனிமேல் மதிமுகவிற்கும், தலைவருக்கும், எனக்கும் உறுதுணையாக நிற்பேன் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார்.
அந்த வாக்குறுதியின் அடிப்படையில் ஏற்கொண்டு மீண்டும் மதிமுகவின் முதன்மை செயலாளராக தொடருவேன் என்று சொல்லி கொள்கிறேன். அதுமட்டுமின்றி, மதிமுகவின் நலனுக்காக யார் கடினமாக உழைக்கிறார்களோ, அவர்களை என் தலை மீது வைத்து தாங்கவும் தயாராக இருக்கிறேன். அதன்படி, மல்லை சத்யா அவர்களின் அரசியல் வாழ்விற்கு நானும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.
மல்லை சத்யா வருத்தம்:
தொடர்ந்து பேசிய மல்லை சத்யா, “மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு எனது நடவடிக்கைகள் வருத்தத்தை கொடுத்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தொடர வேண்டும். அவரும் அதை மறுபரிசீலனை செய்து தொடர்வதாக தெரிவித்துள்ளார். இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்” என்றார்.