மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ.. என்ன நடக்கிறது?

MDMK Durai Veiko : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவிலும் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார். அதே நேரத்தில், திருச்சி எம்.பியாக தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ.. என்ன நடக்கிறது?

துரை வைகோ

Updated On: 

19 Apr 2025 13:14 PM

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான நாளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வைகோ மகன் துரை வைகோ அறிவித்துள்ளார். அதே நேரத்தில், திருச்சி எம்.பி என்ற முறையில் திருச்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறினார்.  மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்தார்.

மதிமுகவில் மோதல்?

இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் வைகோவில் வலதுகரமான மல்லை சத்யாவும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இதனால், சமீப காலங்களில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. அண்மையில் கூட நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதிமுகவில் வைகோவுக்கு பிறகு, துரை வைகோ தான் என்றும், இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் உடனே வெளியேறலாம் என்று துரை வைகோ ஆதரவாளர்கள் கூறினர்.  இதனால், துரை வைகோ ஆதரவாளர்கள் மற்றும் மல்லை சத்யா ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வந்தது.

பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ


இந்த நிலையில்,  மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், “கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன்.

ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன். ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

2026ஆம் ஆண்டு சட்டப்ரேவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் சமீபத்தில் தான் உட்கட்சி மோதல் வெடித்து,  நான் தான் கட்சி தலைவர் என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  அதைத் தொடர்ந்து, மதிமுகவிலும் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.