அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்.. கடிவாளம் போட்ட நீதிமன்றம்.. ஸ்டாலின் முடிவு என்ன?

திமுகவில் முக்கிய அமைச்சர்கள் நான்கு பேருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஊழல், சொத்து குவிப்பு, சர்ச்சை பேச்சு போன்ற குற்றச்சாட்கள் தொடர்பாக நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இவர்கள் அமைச்சர் பதவி இழக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்..  கடிவாளம் போட்ட நீதிமன்றம்.. ஸ்டாலின் முடிவு என்ன?

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, துரைமுருகன்

Updated On: 

25 Apr 2025 14:47 PM

சென்னை, ஏப்ரல் 25 : தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. இந்த சூழலில், திமுகவில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, திமுக அமைச்சர்களுக்கு உயர் நீதிமன்றமும், உச்ச நிதிமன்றமும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது திமுகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மின்சார மற்றும் மது ஆய்வு தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது அவர்களது பதவிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்

2011 முதல் 2015ஆம் அண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, அவர் வேலை வாங்கித் தருவராக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, இந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை தீவிரப்படுத்தியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், பல கட்ட விசாரணைக்கு பிறகு, செந்தில் பாலாஜி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த மூன்றாவது நாளிலேயே அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.  இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பதவி அல்லது ஜாமீனை தேர்வு செய்ய வேண்டும் என கெடு விதித்தது. இதனை 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியது. இதனால், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலினின் திட்டம் என்ன?

அதைத் தொடர்ந்து, திமுகவில் மூத்த தலைவராக இருப்பவர்கள் துரைமுருகன். இவர் தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்து, அடுத்த 6 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 ஆண்டுகளாக இந்த வழக்கு அமைதியாக சென்ற நிலையில், தற்போது சூடுபிடித்துள்ளது. இது துரைமுருகனுக்கு சவாலாக இருக்கும். இதனை அடுத்து, திமுகவில் சர்ச்சைக்குரிய அமைச்சர்களில் ஒருவர் வனத்துறை அமைச்சர் பொன்முடி.

இவர் அண்மையில், பெண்கள் குறித்து இழிவாக பேசினார். இது சர்ச்சையாக வெடித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்றது. மேலும், இவர் மீது வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை கண்டித்ததோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. ஏற்கனவே, கட்சி பதவியை பறிகொடுத்த பொன்முடி, வரும் நாட்களில் அமைச்சர் பதவியையும் இழக்கும் நிலை வரலாம் என கூறப்படுகிறது.

மேலும், சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இப்படி அடுத்தடுத்து அமைச்சர்கள் எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருவது ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.