Coimbatore: மாதவிடாயுடன் தேர்வெழுத வந்த மாணவி.. வகுப்பு உள்ளே அனுமதி மறுப்பு

Coimbatore Private school: கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாதவிடாய் வந்த மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், கதவின் அருகே தரையில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் பெரும் அதிர்வலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும் இந்த விவகாரம் தொடர்பாக, கல்வித்துறை உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.

Coimbatore: மாதவிடாயுடன் தேர்வெழுத வந்த மாணவி.. வகுப்பு உள்ளே அனுமதி மறுப்பு

மாணவி

Updated On: 

10 Apr 2025 17:53 PM

கோவை ஏப்ரல் 10: கோயம்புத்தூரில் (Coimbatore) உள்ள தனியார் பள்ளி ஒன்று, மாதவிடாய் வந்த மாணவிகளை (Menstruating students) வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், கதவு அருகே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு (Private school exam) நடைபெற்று வந்தது. அப்போது தேர்வுக்கு மாதவிடாய் உடன் வந்த மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கதவுக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, இது இயற்கை செயலுக்கு அவமானமாகும் என்று வலியுறுத்தியுள்ளனர். பள்ளி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

மாணவிக்கு என்ன நடந்தது?

கோவை மாவட்டம், சோமனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2025 ஏப்ரல் 09 ஆம் தேதி நேற்று நடைபெற்ற தேர்வின்போது, மாதவிடாய் வந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரை வகுப்பறைக்கு வெளியே, கதவு அருகே தரையில் அமர வைத்து தேர்வு எழுதும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த பாகுபாடு சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களின் வேதனை மற்றும் கண்டனம்

பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர் இந்த சம்பவம் குறித்து கடும் வேதனை அடைந்துள்ளனர். “இது எந்த விதத்தில் நியாயம்? மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இதற்காக மாணவியை இப்படி அவமானப்படுத்துவது கொடுமையான செயல்” என்று அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், சில தகவல்களின்படி, தேர்வு அறையின் புனிதத்தை காக்கவே இவ்வாறு செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. ஆனால், இந்த விளக்கத்தை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இது மூடநம்பிக்கையின் அடிப்படையில் மாணவிகளை அவமதிக்கும் செயல் என்று அவர்கள் கண்டிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இது போன்ற பாகுபாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் மன்னிக்க முடியாதவை. சம்பந்தப்பட்ட பள்ளி மீது உடனடியாக கல்வித்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாதவிடாய் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலை

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் மாணவி மீது சாதிய தீண்டாமை காட்டப்பட்டதாக  எழுந்த புகாருக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.