குடை கொண்டு போங்க.. சென்னையில் தொடரும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Chennai Rain Update : சென்னையில் காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று கனமழை வெளுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். குறிப்பாக, ஈசிஆர் பகுதிகளில் தீவிர மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 16: சென்னையில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று முழுவதும் கனமழை (Chennai Rain Updates) பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். குறிப்பாக, ஈசிஆர், சிறுசேரி, கேளம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், பொன்மார், திருகாலகுன்றம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 2025 மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்தி எடுக்கிறது.
சென்னையில் சூறைக் காற்றுடன் கனமழை
பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகமாக தான் இருந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆனால், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று காலை முதலே சென்னையில் கிளைமேட் மொத்தமாக மாறியது.
நீண்ட நாட்களுக்கு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
இப்படி திடீரென மழை பெய்து சென்னையை குளிர வைத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் சென்னை வானிலை நிலவரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன் கொடுத்த அப்டேட்
The rare April storm (100 mm recorded in some places in Chennai) after 10 years is now moving into ECR belt – Siruseri, Kelambakam, Mahabalipuram, Ponmar, Tiruporur, thirukalakundram will all get intense rains. pic.twitter.com/sDzk2Ul6HL
— Tamil Nadu Weatherman (@praddy06) April 16, 2025
அதன்படி, “10 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் இடியுடன் மழை பெய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இதே நாளில் மழை பெய்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் பொதுவாக சென்னையில் மழை பெய்யாது. 2025 ஏப்ரல் 15ஆம் தேதி சென்னையில் 100 மிமீ மழை பெய்திருக்கிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பெய்த கனமழையால் 100 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இப்போது ஈசிஆர் பெல்ட்டிற்கு மழை மேகங்கள் நகர்கிறது. இதனால், சிறுசேரி, கேளம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், பொன்மார், திருகாலகுன்றம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.