சம்மனை கொடுக்க சென்ற போலீஸ்.. அடுத்த நொடியே உயிரை விட்ட நபர்.. சென்னையில் ஷாக்!
Chennai Crime News : சென்னையில் நிலமோசடி வழக்கு தொடர்பாக சம்மனை கொடுக்க சென்றபோது, சம்பந்தப்பட்ட நபர் திடீரென மயக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த அவரிடம் சம்மனை கொடுக்க சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 10: சென்னை அபிராமபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைக்க முயன்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மனை கொடுக்க போலீசார் வீட்டிற்கு சென்றபோது, அந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை தாழம்பூர் காவல்நிலைய போலீசார் 2025 ஏப்ரல் 9ஆம் தேதி காலையில் அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (55) என்பவரின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். நில மோசடி வழக்கு சம்பந்தமாக சம்மனை அளித்து விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்று அழைத்தனர்.
சம்மனை கொடுக்க சென்ற போலீஸ்
அப்போது, அவர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதில் போலீசாருக்கும், கார்த்திகேயனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் கார்த்திகேயன் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால், போலீசார் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கார்த்திகேயனுக்கு இரண்டு முறை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை காரணமாக அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், போலீசார் கீழே தள்ளிவிட்டதால் தான் கார்த்திகேயன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக நடந்து வருகிறது.
அடுத்த நொடியே வீட்டு வாசலிலேயே உயிரை விட்ட நபர்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். வாழ்க்கை முறை, இதற்கு மோசமான வாழ்க்கை முறை, துரித உணவுகள், உடல் பருமன், மதுபானம் உள்ளிட்ட காரணங்கள் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான், சென்னையில் ஒருவர் திடீரென மயக்க மடைந்த உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், ஹைதரபாத்தில் கிரிக்கெட் விளையாட்டிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் 21 வயதான வினய் குமார். இவர் போட்டிக்கு நடுவில் பீல்டிங் செய்த கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார்.
2025 பிப்ரவரி மாதத்தில் மத்திய பிரதேசத்தில் தன் உறவினர் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த பரிநீதா (23) என்ற இளம்பெண் மேடையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.