Chennai Flood Rescue: அறுந்து விழுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!
Electrocution Rescue: சென்னையின் அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழை நீரில் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால் வைத்த மாணவனை, 23 வயது இளைஞர் கண்ணன் தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார். மாணவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்த கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தன்னலமின்றி செயல்பட்ட கண்ணன், அந்த மாணவனின் உயிரைக் காப்பாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிறுவனை காப்பாற்றிய இளைஞர்
சென்னை, ஏப்ரல் 19: சென்னையை (Chennai) அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால் வைத்த மாணவர் ரேயன் என்பவரை, தனி உயிரை பணயம் வைத்து கண்ணன் என்ற 23வயது இளைஞர் காப்பாற்றியுள்ளார். அந்தவகையில், மாணவர் ரேயனுக்கு முதலுதவி (First Aid) கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்த இளைஞர் கண்ணனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து கண்ணன் நியூஸ் 18 தமிழ் சேனலுக்குக்கு அளித்த பேட்டியில், ”இன்று காலை முதல் சென்னை முழுவதும் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் முழுவதும் தேங்கி சாலையை மூழ்கடித்தது. நான் என் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துகொண்டு கலெக்ஷனுக்காக சென்று கொண்டிருந்தேன்.” என்றார்.
சந்தோஷமாக இருக்கிறேன்:
தொடர்ந்து பேசிய அவர், “அப்போது எதிரே வந்த சிறிய பையன் ஒருவன் திடீரென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அந்த நேரத்தில், நான் அந்த சின்ன பையன் கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டதாக நினைத்தேன்.
அருகில் சென்று பார்த்தபோது அந்த சிறுவன் கை மற்றும் கால்களை உதறிகொண்டு இருந்தான். சட்டென்று அவனுக்கு கரண்ட் அடிக்கிறது என்று புரிந்துகொண்டேன். அதன்பிறகு, அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து பார்த்தேன், ஆனால் யாரும் வரவில்லை. இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து, முதல் முறையாக அந்த சிறுவனை தொட போகும்போது எனக்கு சிறிது ஷாக் அடித்தது. இரண்டு முறை துணிந்து சட்டென அவன் கையை பிடித்து வேகமாக இழுத்துவிட்டேன். பையன் ஷாக் அடிப்பதில் இருந்து தப்பித்து கொண்டான்.
சிறுவனை மீட்ட காட்சி:
சென்னையின் அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழை நீரில் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால் வைத்த மாணவனை, 23 வயது இளைஞர் கண்ணன் தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார்.#TamilNews #TV9Tamil #TamilNadu pic.twitter.com/Z7HuMFcuWM
— TV9 Tamil (@TV9Tamil) April 19, 2025
அதன்பிறகு, அந்த சிறுவனுக்கு முதலுதவி கொடுத்தபிறகு, அவனுக்கு மூச்சு வந்தது. சிறிதுநேரத்திற்கு பிறகு, தண்ணீர் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தேன்.
முதலில் அந்த பையன் ஆபத்தில் இருப்பதை பார்த்தவுடன், என் உயிர் முக்கியமா அல்லது அந்த பையன் உயிர் முக்கியமா என்று தோன்றியது. இதை பார்த்துவிட்டு அப்படியே செல்லவும் மனமில்லை. அந்த பையனுக்கு ஏதாவது ஒன்று நடந்திருந்தால் என் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது. இப்போது அந்த பையனும் நன்றாக இருக்கிறான், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அதுபோதும்.
அந்த பையன் உயிர் பிழைத்தபிறகு, அவனது அம்மாவும், அப்பாவும் எனக்கு நன்றி தெரிவித்தார்கள். அம்மா அழுதார்கள், நான் அப்போது அழுகாதீங்க, பையனை நன்றாக பார்த்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். எல்லாரும் சுயநலத்துடன் இல்லாமல், இதுபோல் அவசர காலத்தில் உதவி செய்தால், ஒரு உயிர் காப்பாற்றப்படும்” என்றார்.