சாலையில் சென்ற பேருந்து.. சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு!
Wheel Detaches In Running Bus | நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஏப்ரல் இன்று(ஏப்ரல் 14, 2025) அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த பேருந்து, ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றபோது சக்கரம் கழன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

கழன்று ஓடிய சக்கரம்
ராசிபுரம், ஏப்ரல் 14 : ராசிபுரத்தில் (Rasipuram) இன்று (ஏப்ரல் 14, 2025) சாலையில் சென்றுக்கொண்டு இருந்த அரசு பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்ற பேருந்தின் சக்கரன் கழன்று ஓடியது எப்படி, பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதா என்பது குறித்தி விரிவாக பார்க்கலாம்.
அரசு பேருந்துகள் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் புகார்கள்
பொதுமக்களின் நலனுக்காக அரசு பேருந்து போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு பேருந்துகள் தரமற்று இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதுமட்டுமன்றி, பேருந்தின் மேற்கூரை ஒழுகுவது, ஜன்னல்கள் உடைந்து தொங்குவது, படிகட்டுகள் உடைந்து தொங்குவது என பல சிக்கல்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும். இந்த நிலையில், ராசிபுரத்தில் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் சென்ற பேருந்து – திடீரென கழன்று ஓடிய சக்கரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து திடீரென சக்கரம் கழன்று ஒடியுள்ளது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், பேருந்து ராசிபுரம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது, திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது.
அப்போது பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் அங்கிருந்த சாக்கடையில் விழுந்துள்ளது. இதனை கண்டு பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இறங்கி சக்கரத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திய நிலையில், எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.