“எந்த ஷா.. வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

MK Stalin On BJP : திருவள்ளூரில் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என்றும் அமித் ஷா இல்லை. எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எந்த ஷா.. வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

அமித் ஷா - ஸ்டாலின்

Updated On: 

18 Apr 2025 13:53 PM

திருவள்ளூர், ஏப்ரல் 18:  அமித் ஷா இல்லை. எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, ரூ.1166 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

“எந்த ஷா.. வந்தாலும் ஆள முடியாது”

மேலும், 2.02 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின், இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும், பாஜக அதிமுக கூட்டணி குறித்து விமர்சித்து இருக்கிறார். அவர் பேசுகையில், ” சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில் வளங்களை உருவாக்கியது கருணாநிதி.

கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் திருவள்ளூர மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநில உரிமைகளுக்கான அகில இந்தியா முகமாக திமுக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. அமித் ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு நிதி கொடுத்தாலும் இங்கிருப்பவர்கள் அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

நாங்கள் கேட்பது அழுகை அல்ல. தமிழ்நாட்டிற்கான உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல. ஊர்ந்து போய் யார் காலிலும் விழுபவனும் அல்ல. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் அழைத்து வாருங்கள். ஒரு கை பார்த்துவிடலாம்.

மற்ற மாநிலங்களில் செய்வது போல தமிழகத்தில் உங்கள் (பாஜக) வேலையை காட்ட முடியாது. டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது. அமித் ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. இது தமிழ்நாடு. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி தான் நடக்கும். உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்று கூறினார்.

தொர்ந்து பேசிய அவர், “ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாததால் அவதூறு பரப்பு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பொறுப்பாக செயல்படாமல் எதிரி கட்சிகள் போல் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது” என்று கூறினார்.  அதிமுக பாஜக கூட்டணி வைத்த நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.