எம் சாண்ட், பி சாண்ட் விலை அதிரடி குறைப்பு.. மகிழ்ச்சியில் வீடு கட்டும் மக்கள்!
தமிழ்நாடு அரசு எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலையை ரூ.1000 அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக வீடு கட்டுவதற்கான செலவு அதிகரித்தது.

தமிழ்நாட்டில் எம்.சாண்ட், பி.சாண்ட் (M-Sand, P-Sand) விலையை ரூ.1000 குறைத்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (Minister Durai Murugan) தலைமையில் நடைபெற்ற இதுதொடர்பான கூட்டத்தில் இந்த முக்கிய முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. மலைகளைக் குடைந்து அவற்றிலிருந்து கிடைக்கும் பாறைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜல்லிக்கல், எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மணலுக்கு பதிலாக வீடு, வணிக வளாகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கும் எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மணல் விலை அதிகம் மற்றும் பல்வேறு இடங்களில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் எம் சாண்ட் பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவை கடந்த அதிமுக ஆட்சியில் கிரஷர்களில் டெலிவரி விலை ரூ.3 ஆயிரம் ஆகவும், ஜல்லி ரூ.2,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு ஆட்சி மாற்றம் நடந்த பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு யூனிட் எம் சாண்ட் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருந்தது.
அதேபோல பி சாண்ட் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சிமெண்ட், செங்கல்,பிளேவர் பிளாக் கற்களின் விலையும் உயர்ந்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்பட்டு வரும் கனிமங்களுக்கு கனமீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் ராயல்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டன் என்ற புதிய அளவில் கன மீட்டருக்கு ரூ.160 ஆக உயர்த்தப்பட்டது.
போராட்டமும் விலை உயர்வும்
இதனை தொடர்ந்து இந்த கனிம விலை உயர்வை எதிர்த்து தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜல்லி, எம்சாண்ட் மற்றும் பிசாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொள்ள கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதனால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
இந்த விலை உயர்வால் எம் சாண்ட் ஒரு யூனிட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் ஜல்லி ரூபாய் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
பொதுமக்கள் அதிருப்தி.. விலை குறைப்பு
கடந்த எட்டு மாதங்களில் எம் சாண்ட் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இது புதிதாக வீடு கட்டுபவர்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடு கட்டுவதற்கான செலவு திட்டமிடலை தாண்டி 30% உயர்ந்துள்ளதாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கிரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேச்சுவார்த்தை முடிவில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லியின் விலையை ரூ.1,000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட ஒரே வாரத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.