2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றி கழகம்.. யாருடன் கூட்டணி? அடுத்த மூவ் என்ன?
Tamilaga Vettri Kazhagam: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக மாவட்டங்களில் இருக்கும் பூத் கமிட்டிகளில் ஏஜெண்டுகள் நியமணம் செய்வது தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஏப்ரல் 12: இன்னும் ஓராண்டு காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மும்மரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அனைத்து வேலைகளையும் மிகவும் துள்ளியமாக செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று (ஏப்ரல் 11,2025) த.வெ.க வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் இருக்கும் பூத் கமிட்டிகளுக்கு நிர்வாகிகள் நியமணம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியல் வரப்போவதாக பேச்சுக்கள் அடிப்பட்டது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி தொடங்குவதாக சொல்லி பதிவு செய்து வந்தார். அப்போது நடிகர் விஜய் இதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் தான் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தனது கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மெல்ல மெல்ல கட்சிப் பணிகளை தொடங்கினார். கட்சி தொடங்கும் போதே தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கட்சி தொடங்கியது முதலே பொது மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து பேசினார். முக்கியமாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம்/ பங்கு வழங்கப்படும் என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பொரும் பேசுப்பொருளாக மாறியது.
அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். மேலும் சட்டம்னற தேர்தலில் போட்டி என்பது தவெக மற்றும் திமுக இடையில் தான் எனவும் பேசினார்.
முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் த.வெ.க:
இது போன்ற சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிற கட்சிகளை போலவே தவெக-வும் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வளர்ந்த அனுபவம் வாய்ந்த கட்சிகளை போலவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த ஆண்டு (2026) வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் 60 ஆயிரம் பூத் கமிட்டிகளில் ஏஜெண்டுகள் நியமிக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இன்னும் ஓராண்டில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், விஜய்யின் யூககங்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பூத் எஜெண்டுகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாருடன் கூட்டணி:
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுத்து வருகின்றனர். தவெகவின் முதல் மாநாட்டில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்தார் விஜய். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் தான் தொடரப்போகிறோம் என உறுதியாக கூறிவிட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுகவினர் கூட்டணியை உறுதி செய்தனர். தமிழக வெற்றிக் கழத்துடன் பாமக கூட்டணி அமைக்கும் என அரசியல் வல்லுநர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் தமிழக வெற்றி கழகம், முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர்.