இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டம்.. அமைச்சர் பொன்முடிக்கு செக்? பாயும் நடவடிக்கை?
Cabinet Meeting: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று (ஏப்ரல் 17,2025) மாலை 6.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதிலும் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் அல்லது வேறு துறைக்கு மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 17: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று (ஏப்ரல் 17,2025) மாலை 6.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய விஷயம் சர்ச்சையானது தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஒராண்டு இருக்கும் நிலையில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேசப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்:
சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகிறது. கூட்டணி அமைப்பது. கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17, 2025) மாலை 6.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 17,2025) சுற்றுலா கலை மற்றும் பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் சட்டப்பேரவை அலுவல் முடிவுக்கு வருகிறது.
சட்டப்பேரவை முடிவுக்கு வந்த உடன் இன்று (ஏப்ரல் 17,2025) மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இதில் பல்வேறு முக்கியமாக விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முக்கியமாக தொழில் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சட்டப்பேரவையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும், ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்கள் எந்த அளவுக்கு செயல்பாட்டில் உள்ளது, அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் கொண்டு சேர்க்கபப்டுகிறதா என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமைச்சர் பொன்முடி மீது பாயும் நடவடிக்கை?
சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமானது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் வகித்து வந்த துணைப்பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவரது பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை பாயும் என்றும், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.