வேகமெடுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை? மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிடும் அதிமுக நிர்வாகிகள்..
ADMK - BJP Alliance: ஏப்ரல் 10, 2025 இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி டெல்லிச் சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் இந்த சந்திப்பில் கூட்டணி உறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 10: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 10, 2025 அன்று இரவு சென்னை வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை:
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது, மேலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தேர்தலை ஒன்றாக சந்தித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த சூழலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே சமயம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என சூசகமாக தெரிவித்திருந்தார். இதுவரை இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10, 2025) இரவு சென்னை வருகை தருகிறார் அமித்ஷா. அவரின் வருகை ஒட்டி அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (ஏப்ரல் 11. 2025) காலை மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு அரசியல் கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதேபோல், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, கே.பி முனுசாமி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, அதிமுக கட்சியனர் இடையே பாஜக உடனான கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து இல்லை என்றும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இதற்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து பேசுயுள்ளார். இந்நிலையில் சென்னை வரும் உள்துறை அமைச்சரை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவர் சென்னையில் இல்லை என்றும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே பாஜக அதிமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.