நயினார் நாகேந்திரன் இட்ட அன்பு கட்டளை.. மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை!

Nainar Nagendran Made Annamalai to Wear Sandals Again | பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் இருந்து நீங்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்திருந்தார். புதிய மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலையிடம் அன்பு கட்டளையாக செருப்பு அணியுமாறு கேட்டுக் கொண்டார்.

நயினார் நாகேந்திரன் இட்ட அன்பு கட்டளை.. மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை!

மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை

Updated On: 

12 Apr 2025 22:23 PM

சென்னை, ஏப்ரல் 12 : பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் இட்ட அன்பு கட்டளையின் காரணமாக மீண்டும் செருப்பு அணிந்தார் முன்னாள் தலைவர் அண்ணாமலை. சபதம் ஏற்று அண்ணாமலை இத்தனை நாட்கள் செருப்பு அணியாமல் இருந்த நிலையில், பதவியேற்ற முதல் நாளே அவரின் சபதத்தை திரும்ப பெற வைத்துள்ளார் நயினார் நாகேந்திரன். இந்த நிலையில், அண்ணாமலை செருப்பு அணியாமல் இருந்ததற்கு காரணம் என்ன?, பதவியேற்பு மேடையில் அண்ணாமலையை நயினார் நாகேந்திரன் சபதத்தை திரும்ப பெற வைத்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செருப்பு அணிய மாட்டேன் என சபதம் ஏற்ற அண்ணாமலை – காரணம் என்ன?

தற்போது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள அண்ணாமலை, தான் பாஜக மாநில தலைவராக இருக்கும்இபோது சபதம் ஒன்றை ஏற்றார். சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் ஞானசேகரன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய நிலையில், அண்ணாமலை அது குறித்து திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை செருப்பு அணிய போவதில்லை என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அண்ணாமலை காலில் செருப்பின்றி பயணித்தார். இவ்வாறு தீவிரமாக தனது சபதத்தை கடைபிடித்து வந்த அண்ணாமலையை, நயினார் நாகேந்திரன் இன்று ( ஏப்ரல் 12, 2025) செருப்பு அணிய வைத்துள்ளார்.

அன்பு கட்டளை இட்டு அண்ணாமலையை செருப்பு அணிய செய்த நயினார் நாகேந்திரன்

நேற்று (ஏப்ரல் 11, 2025) பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலில் நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12, 2025) அவர் புதிய பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர் உடன் இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

பதவி பிரமாணத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் தான் வாங்கி வந்த செருப்பை அண்ணாமலையிடம் வழங்கி, இனிமேல் செருப்பு அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நயினார் நாகேந்திரனின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை செருப்பு அணிந்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.