ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே முற்றிய மோதல்.. உள்துறை அமைச்சர் வருகை காரணமா? அடுத்தது என்ன?
Ramadoss vs Anbumani Ramadoss: பாமக கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ராமதாஸ் - அமித்ஷா- அன்புமணி ராமதாஸ்
சென்னை, ஏப்ரல் 11: ஏப்ரல் 10,2025 பாட்டாளி மக்கள் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ் தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையும் ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ்.. முற்றிய மோதல்:
கடந்த 2022 ஆம ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு, பொது மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை பாமக, அன்புமணி ராமதாஸ் தலைமையில் சந்தித்தது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குள், மீண்டும் கட்சி நிறுவனர் ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பு முகுந்தனுக்கு வழங்கினார். அதற்கு, அதே மேடையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் தன்னை சந்திக்க பனையூரில் இருக்கும் அலுவலகத்திற்கு வருமாறு தொலைப்பேசி எண்ணை பகிர்ந்துக்கொண்டார்.
இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த கட்சியினருக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் முகுந்தனுக்கு வழங்கப்பட்ட பதவி திரும்பப்பெறப்பட்டது. பின்னர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது. இது ஒரு பக்கம் இருக்க கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டதாகவும் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை காரணமா?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக உடன் கூட்டணி அமைத்தது. ஆனால் பாஜக உடன் கூட்டணி என்பதில் அன்புமணி ராம்தாஸுக்கு மட்டுமே உடன்பாடு என்றும் ராமதாஸுக்கு ஆரம்பம் முதலே உடன்பாடு இல்லை என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மக்களவை தேர்தலின் போது அனைத்து சந்திப்பிற்கும் அன்புமணி ராமதாஸ் மட்டுமே முன்னிலைபடுத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.
பாமக கட்சி நிறுவனர் ராமதாஸிற்கு தொடக்கத்தில் இருந்தே கூட்டணி என்றால் அது அதிமுக அல்லது திமுக தான். இந்நிலையில் சென்னைக்கு வருகை தந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரை அன்புமணி ராமதாஸ் சந்திக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டது. அப்படி அமித்ஷாவை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் சந்தித்து பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியில் எந்த ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றாலும், அதனை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடுப்பார்கள். ஆனால் நேற்று (ஏப்ரல் 10, 2025) எந்த தகவலும் இல்லாமல் செய்தியாளர் சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.