ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா? அமைச்சர் சொன்ன பதில்
Food Minister Confirms: தமிழக நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே நாளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி செய்தார். விற்பனை இயந்திரங்கள் பெரும்பாலான கடைகளில் நிறுவப்பட்டு, மீதமுள்ள பகுதிநேர கடைகளுக்கும் விரைவில் வழங்கப்படும். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை ஏப்ரல் 16: நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே நாளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி (Food Minister Chakrabani ) தெரிவித்துள்ளார். 34,793 கடைகளில் விற்பனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன; மீதமுள்ள பகுதிநேர கடைகளுக்கும் விரைவில் வழங்கப்படும். நகரப் பகுதிகளில் 1000, ஊரகப் பகுதிகளில் 800 குடும்ப அட்டைகளுக்குள் தனிக் கடைகள் பிரிக்கப்படும். அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சக்கரை போன்றவை தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாத பொருட்களில் 60% முந்தைய மாதம் 20ம் தேதிக்குள் அனுப்பப்படும். எந்தக் கடையிலும் பொருட்கள் இல்லாவிட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்கும்
தமிழகத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்கச் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் அசோக்குமார் பேராவூரணி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
விற்பனை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாட்டில் உள்ள மொத்த 34,793 நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் பாயிண்ட் ஆஃப் சேல் மெஷின் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,535 பகுதிநேர கடைகளுக்கும் விரைவில் தனி குறியீடுகள் வழங்கி, விற்பனை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
800 குடும்ப அட்டைகள் வரை இருந்தால் தனியாக கடை பிரிக்கப்படும்
மேலும், நகரப் பகுதிகளில் 1000 குடும்ப அட்டைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 800 குடும்ப அட்டைகள் வரை இருந்தால் தனியாக கடை பிரிக்கப்படும் என்றும், 800க்கும் குறைவாக இருந்தால் பிரிப்பு செய்யமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
தேவையான பொருட்கள் எந்தவித தடையுமின்றி வழங்கப்படும்
நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சக்கரை போன்ற தேவையான பொருட்கள் எந்தவித தடையுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்துக்கான பொருட்களில் 60% பொருட்கள், முந்தைய மாதத்தின் 20ம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படுகின்றன. பொதுமக்கள் மாதத் தொடக்கத்திலிருந்தே எந்த நேரத்திலும் இந்தப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
உரிய நேரத்தில் முறையாக கிடைக்க உறுதி
ஒரு குறிப்பிட்ட கடையில் அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைக்காமல் இருந்தால், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொருட்கள் உரிய நேரத்தில் முறையாக கிடைக்க உறுதி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
நியாய விலைக் கடையின் நோக்கம்
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை (அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்றவை) மானிய விலையில் வழங்குதல்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தல்.
பஞ்சாயத்து, நகராட்சி பகுதிகளில் அரசு ரேஷன் கடைகளாக இயங்கும்