சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. சபாநாயகர் அப்பாவு உத்தரவு!
AIADMK MLAs Suspended in Tamil Nadu Assembly | தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 07, 2025) அவை கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்படி பழனிசாமிக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறி கோஷம் எழுப்பினர்.

வெளிநடப்பு செய்த அதிமுகவினர்
சென்னை, ஏப்ரல் 07 : தமிழக சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) இன்று (ஏப்ரல் 07, 2025) அமளியில் ஈடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – Anaithindhiya Anna Dravida Munnetra Kazhagam) சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டப்பேரவையில், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டது ஏன், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 24, 2025 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 07, 2025) சட்டப்பேரவை கூடியது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். ஆனால், டாஸ்மாக் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அது குறித்து விவாதிக்க முடியாது என கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது பேச அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பேரவையில் அதிமுக குறித்து பேசிய முதல்வர்
தாங்கள் சிக்கியிருக்கிற பல்வேறு வழக்குகளில் இருந்து பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாதங்களில் சரணடைந்து நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் தியாகிகள்!
– அதிமுக உறுப்பினர்கள் செயலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.#TNAssembly #AdmkFails pic.twitter.com/c6ZGhYHZ6C
— Chennai DMK (@DMK_Chennai) April 7, 2025
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி பதாகைகளை காட்டியதால் அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அதிமுகவினர் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையை உருவாக்கி, அதற்கு பிறகு விவாதங்கள் நடைபெற்று அதற்கு சபாநாயகர் ஒரு விளக்கம் தந்து திருப்தி அடையாமல் வெளிநடப்பு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அதிமுகவினர் கையில் ஏந்தியிருந்த பதாகைகளில் அந்த தியாகி யார் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
நொந்து போய் நூடுல்ஸ் ஆக இருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதல்வர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்து, அந்த அம்மையாரை ஏமாற்றியவர் தான் இன்று தியாகி ஆக இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தியாகிகள் என்று எழுதி பதாகைகளை கொண்டு வந்ததால் தான் இந்த விளக்கத்தை தருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.