கூட்டணி குறித்து அதிமுக, பாஜக எங்களிடம் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்!

Premalatha Vijayakanth Spoke About AIADMK and BJP Alliance | தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கூட்டணி குறித்து கருத்து சொல்ல முடியாது என்றும், பாஜகவிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து அதிமுக, பாஜக எங்களிடம் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்!

பிரேமலதா விஜயகாந்த்

Published: 

12 Apr 2025 16:45 PM

சென்னை, ஏப்ரல் 11 : அனைத்திந்திய அன்னா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) – பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூட்டணி குறித்து தங்களிடம் எதுவும் பேசவில்லை என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழக (DMDK – Desiya Murpokku Dravida Kazhagam) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 12, 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், அதிமுக – பாஜக குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் அதிமுக – பாஜக

தமிழகத்தில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில், அரசியல் களம் கட்சிகளுக்கு சவாலானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக உடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிந்த சில ஆண்டுகள் கழித்து அந்த கூட்டணி கலைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அது குறித்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். இந்த நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலையும் பாஜக – அதிமுக கூட்டணி இணைந்து சந்திக்கும் என்று அறிவித்தார். இதன் மூலம் அவர்களது கூட்டணி உறுதியாகியுள்ளது.

அதிமுக – பாஜக குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. அது அதிமுகவும் பாஜகவும் இணைந்து எடுத்த முடிவு. சட்டமன்ற தேதலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், நிதானமாக யோசித்து தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும், கூட்டணி தொடர்பாக பாஜக தங்களிடம் எதுவும் பேசவில்லை என்றும், எந்த கூட்டணிக்கு செல்வது என்பது குறித்து தேமுதிக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.