நெருங்கும் தேர்தல்.. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவு..

Case Against Tamil Nadu Ministers: ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது எழுந்த தொடர் சர்ச்சைகள் காரணமாக அவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மேலும் 6 அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இது ஆளும் திமுக அரசிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல்.. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவு..

சொத்து குவிப்பு வழக்கில் 6 அமைச்சர்கள்

Updated On: 

28 Apr 2025 21:05 PM

தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் 5 அமைச்சர்களுக்கு புதிய சிக்கல் பிறந்துள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமா செய்ததை அடுத்து மேலும் ஐந்து அமைச்சர்களுக்கு கிடுக்கப்பிடி விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில் அமைச்சர்கள் மீதான வழக்கு தீவிரமடைந்து வருகிறது. நீர்ப்பாசன துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் ஆக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆக இருக்கும் மா. சுப்ரமணியன் ஆகிய அமைச்சர்கள் மீது நீதிமன்றம் அவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

 அமைச்சர் மா சுப்பிரமணியன்:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மீது கிண்டியில் உள்ள சிட்கோ தொழில்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான மனையை போலியாவணங்கள் தயாரித்து அமைச்சர் அபகரித்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மனு அதிமுக ஆட்சியில் தான் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை எம்பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட அந்த நிலம் வாங்கி சுமார் 20 ஆண்டுகள் ஆவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மா. சுபிரமணியன் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்:

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்த திமுக ஆட்சியின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதவி வகித்து வந்தார். அப்போது அவரும் அவரது மனைவி ஆதிலட்சுமியும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 44 லட்சத்தி 56 ஆயிரத்து 64 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அவரையும் அவரது மனைவியையும் விடுவித்தது. ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 – 2011 வரை இருந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார், அப்போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 77 லட்சம் வரை சொத்து சேர்த்தாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தது, இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னையும் தனது மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது, ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணைக்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் துரைமுருகன்:

திமுக அமைச்சரவையில் நீர் பாசன துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இதற்கு முன்பு பதவி வகித்து வந்தார். 1996 முதல் 2001 ஆம் காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 3.92 கோடி அளவு சொத்து சேர்த்ததாக அவர் மீது 2002 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2007 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்தது. மேலும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அத்தோடு துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதை தவிர அவர் மீது 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2025 ஏப்ரல் 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்த வழக்கை, இந்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்:

தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 1996 முதல் 2001 மற்றும் 2006 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இருந்த திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் மூன்று கோடி சொத்து சேர்த்ததாக அவரும் அவரது மனைவி, மகன் மீதும் ஊழல் ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் அவர் உட்பட 3 போரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அதாவது மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 2025 ஏப்ரல் 25ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவரது மனைவி மகன் ஆகியோரை விடுவித்த கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் இந்த சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடித்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி:

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஐ.பெரியசாமி வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடி ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி உட்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில், அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஆளும் திமுக அரசிற்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. ஆட்சி அமைந்து பலமுறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர்கள் மீது இருக்கும் வழக்கு விசாரணையை தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.