வள்ளியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. 4 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதி எதிர் வந்த காரில் மோதியது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டரை வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்டங்களில் முக்கிய மாவட்டமான திருநெல்வேலி வழியாக நாகர்கோவில், கன்னியாகுமரி, கேரளா ஆகிய ஊர்களுக்கு செல்லலாம் என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்படியான நிலையில் இன்று (ஏப்ரல் 27, 2025) வள்ளியூர் அருகே இந்த சாலை விபத்தானது நடைபெற்றுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த காரில் நான்கு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த காரானது வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டரை வயது குழந்தை, இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்து போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து அதிவேகத்தால் நடந்ததா? அல்லது காரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்ததா என்ற பாணியில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகரிக்கும் விபத்துகள்
இந்திய அளவில் சாலை விபத்துக்கள் நாள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இருந்தாலும் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்வது, தூக்கம் தொலைத்து ஓட்டுநர்கள் பணி செய்வது, சாகசத்தில் ஈடுபடுவது, சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிப்பது, வாகனங்கள் தரமானதாக இருக்கிறதா என பரிசோதனை செய்யாமல் இயக்குவது உள்ளிட்ட பல சம்பவங்கள் காரணமாக விபத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே வழியெங்கும் சிசிடிவி, வேக கட்டுப்பாட்டு கருவி, அபராதங்கள் என விதித்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. விபத்துகளில் சிக்குபவர்கள் உடல் உறுப்புகள் சேதப்படுவது மட்டுமின்றி உயிர் போகும் அளவுக்கு சம்பவம் நிகழ்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.