”அதிகமாக முடி கொட்டுது” 15 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் அதிர்ச்சி!
Tiruppur Crime News : அதிகமாக முடி கொட்டுவதால் விரக்தி அடைந்த 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு அதிகமாக முடி கொட்டுவதால், அசிங்கமாக இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் கூறினர்.

திருப்பூர், ஏப்ரல் 11: திருப்பூரில் 9ஆம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முடி அதிகமாக கொட்டுவதால் விரக்தியில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி சுலோச்சான தம்பதி.
15 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஷ்ணு என்பவர் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். கிருத்தீஸ்வரன் என்ற 15 வயதான மகன் 9ஆம் வகுப்பு முடித்துள்ளார். மாணவன் கிருத்தீஸ்வரன் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2025 ஏப்ரல் 9ஆம் தேதியான நேற்று முன்தினம் தான் 9ஆம் வகுப்பு தேர்வு முடிந்துள்ளது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான நேற்று இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த பெற்றோர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர் கிருத்தீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனை அடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதிகமாக முடி கொட்டுவதால் விரக்தி
அப்போது, மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனக்கு அதிகமாக முடி கொட்டுவதாகவும், இதனால் தான் அசிங்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு வாழ பிடிக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இருப்பினும், மாணவர் கிருத்தீஸ்வரன் உண்மையாகவே முடி கொட்டுவதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? இல்ல வேற எதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவனின் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சென்னை சேதுப்பட்டியில் 12ஆம் வகுப்பு மாணவர் நான்காவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் கண்முன்னே மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் உருவக் கேலி செய்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
(தற்கொலை தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)