India’s Lowest Test Cricket Scores: 36 ரன்களின் சுருண்ட வரலாறு! டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் டாப் 10 குறைந்த ஸ்கோர் லிஸ்ட்!
Top 10 Lowest Test Scores for India: 2024 அக்டோபர் 17 அன்று நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது, அப்போது முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர்களை எடுத்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் (Test Cricket) இந்திய அணியின் நீண்டகால பாரம்பரியத்தை கொண்டுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியும், இந்திய வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக சுனில் கவாஸ்கர், சேவாக், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, அசாரூதின், எம்.எஸ்.தோனி, விராட் கோலி தற்போது ரோஹித் சர்மா (Rohit Sharma) என பல்வேறு கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். இருப்பினும், இந்திய அணி டெஸ்டில் பல்வேறு மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. அதில், ஒன்று குறைந்த ஸ்கோர். சமீபத்தில் இந்திய அணி கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 46 ரன்களுக்கு சுருண்டது. இது ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பதிவு செய்த மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும், சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எடுத்த மிக குறைந்த ஸ்கோராகவும் இது பதிவானது.
இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர்:
2020 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களுக்கு சுருண்டபோது இந்தியாவின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோராக அமைந்தது. இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி எடுத்த 10 குறைந்த பட்ச ஸ்கோர்களின் எண்ணிக்கையை இங்கு தெரிந்து கொள்வோம்.
குறைந்த ஸ்கோர் | எதிரணி | மைதானம் | நடந்த ஆண்டு, தேதி |
36 | ஆஸ்திரேலியா | அடிலெய்டு | டிசம்பர் 17, 2020 |
42 | இங்கிலாந்து | லார்ட்ஸ் | ஜூன் 20, 1974 |
46 | நியூசிலாந்து | பெங்களூரு | 16 அக்டோபர், 2024 |
58 | ஆஸ்திரேலியா | பிரிஸ்பேன் | நவம்பர் 28, 1947 |
58 | இங்கிலாந்து | மான்செஸ்டர் | ஜூலை 17, 1952 |
66 | தென்னாப்பிரிக்கா | டர்பன் | டிசம்பர் 26, 1996 |
67 | ஆஸ்திரேலியா | மெல்போர்ன் | பிப்ரவரி 06, 1948 |
75 | வெஸ்ட் இன்டீஸ் | டெல்லி | நவம்பர் 25, 1987 |
76 | தென்னாப்பிரிக்கா | அகமதாபாத் | ஏப்ரல் 03, 2008 |
78 | இங்கிலாந்து | லீட்ஸ் | ஆகஸ்ட் 25, 2021 |
சமீபத்திய குறைந்த பட்ச ஸ்கோர்:
2024 அக்டோபர் 17 அன்று நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது, அப்போது முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர்களை எடுத்தனர். அதே நேரத்தில் 5 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்தியா 36 ஆல் அவுட்:
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அத்தியாயங்களில் ஒன்றாக எப்போதும் நினைவில் இருக்கும். பகல்-இரவு போட்டியாக விளையாடிய இந்தியா, போட்டியை வலுவான முறையில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 74 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். பின்னர் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவை அவுட்டாக்கிய பிறகு, இந்தியா முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது.
இருப்பினும், மூன்றாம் நாளில் நடந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியாவின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசையை சீர்குலைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். இந்தியா வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பேட்ஸ்மேன்களில் யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இந்திய அணி மாயங்க் அகர்வாலின் 9 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராகும். 90 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா எளிதாக துரத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.