IPL 2025: சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் – 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி
CSKvsSRH : இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மிகவும் முக்கியமானது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

CSK vs SRH
ஐபிஎல் 2025 இன் ஏப்ரல் 25, 2025 அன்று நடைபெற்ற 43வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மிகவும் முக்கியமானது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை 8-8 போட்டிகளில் விளையாடி 2-2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஒரு தோல்வி இந்த அணிகளுக்கு பிளேஆஃப்களுக்கான பாதையை மூடிவிடும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜித் இந்த போட்டியைக் காண வந்தது இன்றைய நாளின் ஹைலைட்டாக அமைந்தது.
டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே பலத்த அடியாக அமைந்தது. வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே சென்னை அணியின் சார்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷேக் ரிஷீதின் விக்கெட்டை விழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மென்கள்
இந்த நிலையில் சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி சென்னைக் அணிக்கு நம்பிக்கை அளித்தார். மறுபக்கம் சாம் கரண் 10 பந்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக மாத்ரே உடன் ஜடேஜா இணைந்தார். இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய 6 வது ஓவரில் மாத்ரே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
சேப்பாக்கத்தில் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன்
Pic of the day! ❤️#SK #AarthySK #Ajithkumar #ShaliniAjithkumar pic.twitter.com/SE0M2SELV9
— All India SKFC (@AllIndiaSKFC) April 25, 2025
பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. அதன் பிறகும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் தள்ளாடியது. அடுத்ததாக வந்த ஜடேஜாவும் 1 பவுண்டரி, 1 சிக்சர் என 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பிரேவிஸ் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். அவர் 1 பவுண்டரி 4 சிக்ஸ் என 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ்.தோனி 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஹர்ஷல் படேல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் கம்மின்ஸ், ஜெய்தேவ் தலா 2 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் மற்றும் ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஹைதராபாத் அபார வெற்றி
இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். இதனையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 16 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் அடித்து 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை.
கடைசி கட்டத்தில் மெண்டிஸ் மற்றும் நித்திஸ் குமார் இணைந்து தங்களது அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இந்த நிலையில் 18.4 ஓவரில் அந்த அணி இலக்கை அடைந்தது. மெண்டிஸ் 32 ரன்களுடனும், நித்திஸ் குமார் ரெட்டி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.