டீசர்ட்டை கழற்றி சுற்றிய கங்குலி – எச்சரித்த சச்சின்: என்ன நடந்தது தெரியுமா?
அன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து வரலாற்றில் இடம் பிடித்தது. முகமது கைப் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து இந்தியாவுக்கு அதிரடியான வெற்றியைத் தந்தார்கள். அன்று தான் டீ சர்ட்டை கழற்றி சுற்றி ஆக்ரோஷமான சௌரவ் கங்குலியை அனைவரும் பார்த்தார்கள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி மிகவும் பிரபலமானது. நேட்வெஸ் தொடரன் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 325 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொள்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலானது. அன்றைய போட்டியில் இந்தியா நிச்சயம் தோற்கும் என்றே பலரும் கருதினர். ஆனால் அன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து வரலாற்றில் இடம் பிடித்தது. முகமது கைப் (Mohammad Kaif) மற்றும் யுவராஜ் சிங்(Yuvraj Singh) இணைந்து இந்தியாவுக்கு அதிரடியான வெற்றியைத் தந்தார்கள். அன்று தான் டீ சர்ட்டை கழற்றி சுற்றி ஆக்ரோஷமான சௌரவ் கங்குலியை (Sourav Ganguly) அனைவரும் பார்த்தார்கள்.
இந்த நிலையில் அன்றைய போட்டியின் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக தி ரன்வீர் ஷோ என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், அப்போது தான் இந்திய அணியின் மேனேஜராக இருந்ததகாக குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய போட்டியில் “அந்த தருணம் மிகவும் மறக்க முடியாது. நாங்கள் கிட்டத்தட்ட தோற்கப்போகிறோம் என நினைத்தேன். அந்த நினைப்பு ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நான் ரத்த அழுத்தத்துக்காக ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டேன்.
கங்குலியின் தன்னம்பிக்கை
நான் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்கு 325 ரன்கள் இலக்காக வந்தவுடன், கங்குலியிடம் கேட்டேன். ஆனால் அவர், ‘சார், முதலில் களமிறங்கலாம். வருவதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார். அவர் முழுவதுமாக தன்னம்பிக்கையுடன் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியா சார்பாக சௌரவ் கங்குலி மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இணைந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்து வலுவான கூட்டணியை அமைத்து சிறப்பான துவக்கம் தந்தனர். ஆனால், விரைவிலேயே 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோல்வி நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டேன். அந்த நேரத்தில், யுவராஜ் மற்றும் கைப் கூட்டணியை அமைத்து 121 ரன்கள் எடுத்து கடைசி 3 பந்துகளுக்கு முன்னதாகவே இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முகமது கைப் 87 ரன்களும் யுவராஜ் சிங் 69 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தனர்.
சச்சினின் எச்சரிக்கை – கங்குலி காட்டிய வெறித்தனம்
இலக்கை நெருங்கும் போது, கங்குலி அணியின் அனைத்து வீரர்களுக்கும், டிசர்ட்டை கழற்றி சுற்றுமாறு கேட்டுள்ளார். முன்னதாக ஆண்ட்ரூ ப்ளின்டாஃப் ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற ஒரு போட்டியில் வெற்றி பெற்றபோது இதே செயலைச் செய்ததன் காரணமாக பதிலுக்கு தாங்களும் செய்ய வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அனைவரும் இப்படி செய்யக் கூடாது. கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேனின் விளையாட்டு. இது நல்லதாக இருக்காது’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட நான் கங்குலியிடம் நீங்கள் மட்டும் செய்யுங்கள். மற்றவர்கள் அப்படி செய்ய வேண்டாம் என்றேன். கங்குலி அவ்வளவு ஆக்ரோஷமாக டிசர்ட்டை சுழற்றியது வரலாற்று புகைப்படமாக மாறியது. இந்திய அணியின் ஆக்ரோஷமான கேப்டன் அவர் தான் என்றார்.