IPL 2025: ரன்கள் பட்டியலில் சாய் சுதர்சன் முதலிடம் – குஜராத்தை கலக்கும் தமிழன்!
இந்த ஐபிஎல் 2025ல் குஜராத் டைட்டனஸ் அணிக்காக களமிறங்கியுள்ள சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் கலக்கி வருகிறார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சாய் சுதர்சன்
இந்த ஐபிஎல் 2025 (IPL 2025)ஆனது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எப்பொழுதுமே ஆதிக்கம் செலுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகள் தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றன. அதிலும் சிஎஸ்கே அணி பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 12, 2025 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில மோசமான ஃபார்மை அந்த அணி வெளிப்படுத்தியது. பழைய பன்னீர் செல்வமாக வந்து அணியை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களை ஏமாற்றினார். இந்த நிலையில் ஏப்ரல் 12, 2025 அன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன் அணியின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி அசத்தல் துவக்கம் தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் எடுத்தனர். சுப்மன் கில் 38 பந்துகளில் 60 ரன்களும், சாய் சுதர்சன் 1 சிக்ஸ், 7 பவுண்டரிகள் என 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
குஜராத்தைக் கலக்கும் தமிழர்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கியுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். கடந்த மார்ச் 25 , 2025 அன்று பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 சிக்ஸ், 5 பவுண்டரிகள் என 41 பந்தில் 71 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த மார்ச் 29, 2025 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் என 41 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2, 2025 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 சிக்ஸ், 7 பவுண்டரிகள் என 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கடந்த ஏப்ரல் 9, 2025 அன்று ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் 3 சிக்சர், 8 பவுண்டரிகள் என 82 ரன்களைக் குவித்தார்.
அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடம்
தற்போது ஏப்ரல் 12, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 56 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இதனையடுத்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார் சாய் சுதர்சன். கடந்த ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய அவர் 50 ரன்களைக் கடந்தார் அவர் ஒரு ஸ்டேடியத்தில் தொடர்ச்சியாக 5 முறை 50 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடர் தோல்விகள் ஒரு பக்கம் ரசிகர்களுக்கு கவலை அளித்தாலும் சென்னை வீரர் ஒருவர் குஜராத் அணியில் கலக்கிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.