Sachin Tendulkar Birthday: தலைவன் ஒருவன்! கிரிக்கெட்டின் கடவுள் இவரே! சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 சாதனைகள்!
Sachin Tendulkar's 5 Unbreakable Records: சச்சின் டெண்டுல்கரின் 52வது பிறந்தநாளையொட்டி, அவரது அசாத்தியமான 5 சாதனைகளைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக 50+ ஸ்கோர்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக நாட்கள் விளையாட்டு, அதிக சர்வதேச போட்டிகள், மற்றும் ஒரு வருடத்தில் அதிக ஒருநாள் ரன்கள் என சச்சின் படைத்த சாதனைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகள் கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (Schin Tendulkar) இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கர் ஒரு பிரபல மராத்தி எழுத்தாளர் மற்றும் தாய் ரஜினி டெண்டுல்கர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். சச்சினின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஒரு மருத்துவர். சச்சின் டெண்டுல்கருக்கு சாரா டெண்டுல்கர் (Sara Tendulkar) என்ற மகளும், அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) என்ற மகனும் உள்ளனர். சச்சின் தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 48.52 சராசரியாக 34,357 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 100 சதங்களும், 164 அரைசதங்களும் அடங்கும். இந்தநிலையில், சச்சின் படைத்த ஒருபோதும் உடைக்க முடியாத 5 சாதனைகளை பெற்றி தெரிந்து கொள்வோம்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தமாக 34,357 சர்வதேச ரன்களை அடித்துள்ளார். இந்த ரன் எண்ணிக்கையை இன்றுவரை எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் எட்டை முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா 28016 ரன்களுடன் 2வது இடத்திலும், விராட் கோலி 27599 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அதிக 50 பிளஸ் ரன்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 264 முறை 50 பிளஸ் ஸ்கோர்களை அடித்துள்ளார். இதில்,100 சதங்களும், 164 அரைசதங்களும் அடங்கும். அதாவது ஒருநாள் போட்டிகளில் 145 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 119 முறையும் 50க்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார் சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் இத்தனை முறை 50 பிளஸ் ஸ்கோர்களை அடித்தது கிடையாது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக நாட்கள் விளையாடிய சாதனை:
சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ஒருநாள் போட்டியை 1989ம் ஆண்டு விளையாடினார். அதன்பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக உருவெடுத்து 2011ம் ஆண்டு வரை இந்திய அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக வலம் வந்தார். இந்த ஆண்டுதான் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைகளில் ஏந்தியது. இதன்மூலம், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் 91 நாட்கள் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக நாட்கள் விளையாடிய பெருமை முஷ்பிகுர் ரஹீமின் பெயரில் உள்ளது. இவர் வங்கதேச அணிக்காக 18 ஆண்டுகள் 92 நாட்கள் விளையாடியுள்ளார்.
அதிக சர்வதேச போட்டியில் களம்:
அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 463 ஒருநாள் 200 டெஸ்ட் மற்றும் ஒரு டி20 சர்வதேச போட்டி உட்பட 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது இன்னும் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு உலக சாதனையாகும்.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஒருநாள் ரன்கள்:
1998 ஆம் ஆண்டில், சச்சின் ஒருநாள் போட்டிகளில் 1,894 ரன்கள் எடுத்தார், இது இன்றுவரை ஒரு வருடத்தில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இந்த சாதனையை யாராலும் நெருங்கக்கூட முடியவில்லை.