காயம் காரணமாக ருதுராஜ் விலகல் – மீண்டும் கேப்டனாகிறார் தோனி! வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே?
Dhoni Returns as CSK Captain: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறார். இதனையடுத்து சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ருதுராஜ் - தோனி
இதுவரை 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி இந்த ஐபிஎல்(IPL) 2025ல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தொடர் தோல்விகளால் அந்த அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்து கடைசி இடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணி உள்ளது. குறிப்பாக இந்த சீசனில் சென்னை அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டங்களில் சிஎஸ்கேவின் வீரர்கள் கேட்ச்சுகளை தவறவிட்டு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்த நிலையில் சென்னை அணி 202 ரன்கள் எடுத்தும் வெற்றிபெறாமல் போனது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான ஹேமந்த் பதானி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து பிளெமிங் எந்த போட்டியிலும் வெற்றிபெற்றது கிடையாது. ஃபிளெமிங் நல்ல கோச் என்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தோனி தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம். அவர் இந்தியர் என்பதால் மற்ற வீரர்களை எப்படி கையாள்வது என அவருக்கு தெரியும். சில நேரம் கோபப்படுவார், சில நேரம் அன்பாக பேசி வேலை வாங்குவார். அதே போல ரோகித் சர்மா இந்திய கேப்டன். அவரும் 5 முறை வெற்றிபெற்றிருக்கிறார். ஐபிஎல்லில் இந்திய கோச் மிகவும் அவசியம் என்று பேசினார்.
மீண்டும் கேப்டனாக தோனி !
🚨 OFFICIAL STATEMENT 🚨
Ruturaj Gaikwad ruled out of the season due to a hairline fracture of the elbow.
MS DHONI TO LEAD. 🦁
GET WELL SOON, RUTU ! ✨ 💛#WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/U0NsVhKlny
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2025
இந்த நிலையில் காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனையடுத்து மீதமுள்ள போட்டிகளில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக பொறுப்பேற்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ருதுராஜ் விலகுவதற்கான காரணம்
இதுதொடர்பாக பயிற்சியாளர் ஃபிளெமிங் பேசியதாவது, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ருதுராஜிற்கு காயம் ஏற்பட்டது. அவரது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக தோனி கேப்டனாக பொறுப்பேற்பார் என்று தெரிவித்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதால் இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்விகளால் கேப்டனாக ருதுராஜ் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தோனி சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி தனது அனுபவத்தினால் சென்னை அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என நம்பலாம்.