Women’s World Cup 2025: உலகக் கோப்பை விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி!
Pakistan Women's Cricket Team: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 மகளிர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் பெண்கள் அணி இந்தியாவிற்கு பயணம் செய்யாது என அறிவித்துள்ளார். ஹைபிரிட் மாதிரியைப் பின்பற்றி, நடுநிலையான இடத்தில் போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்படி, ஒரு நாடு போட்டிகளை நடத்தினால், மற்ற நாட்டு அணி நடுநிலை மைதானத்தில் விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா துபாயில் விளையாடியது போலவே, பாகிஸ்தானும் நடுநிலை மைதானத்தை தேர்வு செய்யும்.

2025ம் ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்காக (Women’s World Cup 2025) தனது பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவிற்கு பயணம் செய்யாது என்றும், 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹைபிரிட் மாடலை பின்பற்றி நடுநிலையான இடத்தில் தங்களது போட்டிகள் விளையாடப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி (PCB chief Mohsin Naqvi) தெரிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய ஆண்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டி உட்பட அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் ஒப்பந்தம்:
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏதேனும் ஒரு நாடு ஐசிசி கோப்பைக்கான போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்தினால், அப்போது எதிர் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் அணி தங்கள் போட்டிகளை ஹைபிரிட் மாடல் அடிப்படையில் விளையாடுவார்கள் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது போட்டிகளை விளையாடாதது போல, நாங்களும் நடுநிலையான இடத்தில் விளையாடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நக்வி உறுதி:
PCB chairman Mohsin Naqvi said: Pakistan team will not travel to India for Women’s World Cup. pic.twitter.com/4HePM53F3t
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) April 19, 2025
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவிக்கையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தும் நாடாக இந்தியா இருப்பதால், நாங்கள் விளையாடும் நடுநிலையான இடத்தை இந்தியாவும் ஐசிசிதான் முடிவு செய்ய வேண்டும். எங்க மைதானம் உறுதி செய்யப்படுகிறதோ, அங்கதான் விளையாடுவோம். ஒரு ஒப்பந்தம் ஏற்படும்போது, அனைவரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
தொடந்து பேசிய அவர், “சொந்த மண்ணின் சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது, ஒரு அணியாக எப்படி விளையாடுவது என்பதை பாகிஸ்தான் மகளிர் அணி காட்டி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. பெண்கள் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் அணியின் சிறந்த செயல்திறனைப் பாராட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிச்சயமாக ஒரு சிறப்பு விருதை அறிவிக்கும். சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றொரு ஐசிசி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை எப்போது..?
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் 2025 செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நுழையும். லாகூரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் பாகிஸ்தான் தனது ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தகுதி சுற்றில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், தாய்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய தோற்கடித்து பிரதான சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றனர், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவை ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.