Asia Cup 2025: பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுமா..?

India-Pakistan Cricket: பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து ஐயங்கள் எழுந்துள்ளன. 2025 ஆசியக் கோப்பையில் இரண்டு அணிகளும் மோதுமா என்பது சந்தேகம். இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என பலர் வலியுறுத்துகின்றனர். 2025 ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இருந்தால் மூன்று போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.

Asia Cup 2025: பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுமா..?

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்

Published: 

24 Apr 2025 09:25 AM

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு பிறகு, இந்தியா முழுவதும் மக்கள் தங்களது துக்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் (Pahalgam Terror Attack) ஒரு ராணுவ வீரர் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 30க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி உட்பட பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தியா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக (India – Pakistan) விளையாடக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில், 2025 செப்டம்பர் மாதம் இரு அணிகளும் 2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) விளையாடுகிறது. இதில், இரு அணிகளும் மோதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி:

2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் நேருக்குநேர் மோதியது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒன்று அல்ல இரண்டு அல்ல, 3 போட்டிகளில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

2025 ஆசியக் கோப்பையை இந்திய அணி நடத்த இருக்கிறது. முன்னதாக, பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய அணி மறுத்தது. இதன் காரணமாக, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய அணி விளையாடிய போட்டிகள் அனைத்தும் துபாய் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் கூட இந்தியாவிற்கு போட்டிகளில் விளையாட வராமல் போக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையைப் பெறலாம்.

2025 ஆசியக் கோப்பை எப்போது..?

2023 ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் நடத்தப்பட்டதால், 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும். இந்த 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறலாம்.

ஒரே குழுவில் இடம்பெற்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் 2025 ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. லீக் சுற்றில் ஒரு முறையும், இதற்குப் பிறகு, சூப்பர்-4 சுற்றிலும் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி இருக்கலாம். அதனை தொடர்ந்து, இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்தால் 2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3வது முறையாக மோதலாம். ஆசிய கோப்பை 2025 குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. 2025 ஆசிய கோப்பை அட்டவணை, வடிவம் மற்றும் அணி பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு வழிமுறைகளை பொறுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுமா இல்லையா என்பதும், ஐசிசி தலையிட்டு பிரச்சனைக்கு முடிவு கட்டுமா என்பதும் தெரிய வரும்.