India-Pakistan Cricket: இந்திய அணி இனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாதா..? பிசிசிஐ சொன்ன தகவல்..!
Pahalgam Terror Attack: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகி, பலர் காயமடைந்தனர். இந்தக் கொடூரச் செயலை பிசிசிஐ கண்டித்துள்ளது. ராஜீவ் சுக்லா, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து மத்திய அரசின் முடிவைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 26 உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுபோல் மோசமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பைசரனில் நடந்த இந்த சம்பவம் இந்தியா முழுவதும் துக்கம், கோபம் ஆகியவற்றை தூண்டியுள்ளது. இதற்கு மத்திய பதிலடி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதற்கு குறித்து பிசிசிஐ ராஜீவ் சுக்லா (Rajiv Shukla), தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் ராஜீவ் சுக்லா..?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா, ஸ்போர்ட்ஸ் தக்குடன் ஒரு பிரத்யேக உரையாடலில் பேசினார். அப்போது அவர், “ பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். அதை நாங்கள் கண்டிக்கிறோம். நேற்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்கள் இழந்த துயர சம்பவத்தால் கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளது. பிசிசிஐ சார்பாக, இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை வலுவான வார்த்தைகளால் கண்டிக்கும் அதே வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலையும், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வலியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதில், இந்த துயர நேரத்தில் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம்” என்றார்.
ராஜீவ் சுக்லாவின் பதிவு:
The terrorist attack on innocent tourists in Jammu & Kashmir’s #Pahalgam is an act of sheer cowardice and stands as a stark reminder of the threat posed by terrorism to peace and humanity. Such heinous acts are highly condemnable. My thoughts and prayers are with the victims and…
— Rajeev Shukla (@ShuklaRajiv) April 22, 2025
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை பிசிசிஐ நிறுத்த வேண்டுமா என்று கேட்டபோது, அவர் கூறியதாவது, “ எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும் அதை செய்வோம். மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. மேலும், இனிமேல் பாகிஸ்தானுடன் எக்காரணத்தை கொண்டும் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஐசிசி போட்டிகள் என்று வரும்போது, ஐசிசி முக்கிய முடிவுகள் எடுக்கிறது, இதன் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐசிசிக்கு தெரியும். இதன்பிறகு, அவர்கள் முடிவு எடுப்பார்கள்.” என்றார்.