124 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! எந்த டீம்கள் பங்கேற்கின்றன? என்ன விதி?
Olympic Cricket Returns: 124 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் கிரிக்கெட் பிரபலமாகவுள்ளது. எந்தெந்த அணிகள் பங்கேற்கும், விதிகள் என்ன ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிரிக்கெட (Cricket) மீண்டும் ஒலிம்பிக் (Olympic) விளையாட்டுகளில் இடம்பெற உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 124 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் (America) லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ள 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆறு அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளன. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முதற்கட்டத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மற்ற அணிகள் இணைவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இதில் இடம்பெறாது. இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே இந்த 6 அணிகளும் பங்கேற்கும். ஐபிஎல் போன்று குறைந்த கால அளவில், விரைவில் அடுத்தடுத்த போட்டிகளை நடத்த முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பு கிரிக்கெட் அணியினரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள். மேலும் எத்தனை போட்டிகள் நடத்தப்படும், போட்டியின் விதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரைவில் தெரியவரும். கிரிக்கெட் விளையாட்டை உலக அளவில் மற்ற நாடுகளுக்கும் கொண்டும் சேர்க்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
ஒலிம்பிக் மூலம் உலக நாடுகளில் பிரபலமாகும் கிரிக்கெட்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைத்ததன் மூலம், இந்த விளையாட்டு மேலும் பல புதிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை மற்ற விளையாட்டுக்களைக் காட்டிலும் கிரிக்கெட்டில் உலக அளவில் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் பட்சத்தில் அதிக பதக்கங்கள் இந்தியாவின் வசமாகும் என்பது உறுதி.
1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி
கடந்த 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்பதால் அப்போது நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் அந்த போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே பங்கேற்றிருக்கிறது. டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற அதில் இங்கிலாந்து வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் தகுதி பெறும் விதிகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக விவரிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் அந்த நாட்டின் கிரிக்கெட் அணி நேரடியாக இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால் அதற்குள் வலுவான இந்திய அணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த பிறகு இதுகுறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.