Delhi Dust Storm: பயிற்சிக்குள் புகுந்த புழுதிப் புயல்.. பதறி அடித்து ஓடிய மும்பை வீரர்கள்.. இணையத்தில் வீடியோ வைரல்!
Arun Jaitley Stadium: டெல்லியில் பயிற்சி மேற்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, திடீர் புழுதிப் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பயிற்சி தடைபட்டது. வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட சேதங்கள், மற்றும் வரும் DC vs MI போட்டிக்கான வானிலை முன்னறிவிப்பு ஆகியவை இந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஐபிஎல் 2025 செயல்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

டெல்லியில் புழுதி புயல்
டெல்லியில் (Delhi) கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென வானிலை மாறி, பல பகுதிகளில் புழுதிப் புயல் (Dust Storm) வீச தொடங்கியது. அதனை தொடர்ந்து, பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் (Arun Jaitley Stadium) பயிற்சி மேற்கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பலத்த புயல் காரணமாக, ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் கீழே விழுவதுபோல் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. அந்தநேரத்தில், பயிற்சியின் இருந்த அனைத்து வீரர்களும் தலைதெறிக்க ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மும்பை vs டெல்லி போட்டி:
2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் 27வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 2025 ஏப்ரல் 13ம் தேதி மோத இருக்கிறது. இந்த போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (11.04.2025) பயிற்சிக்காக ஸ்டேடியத்திற்குள் சென்றது. ஆனால், சிறிது நேரத்தில், வானிலை திடீரென மாற தொடங்கியது. இதனால், வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வீரர்கள் பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்த சம்பவத்தின் முழு காட்சியையும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்தது. இதில் மைதானத்தில் உள்ள விளம்பர பலகைகளும் காற்றில் பறப்பதையும், புழுதிப் புயல் வருவதையும், டிரென்ட் போல்ட் மைதானத்தை விட்டு வேகமாக கத்திக் கொண்டு ஓடுவதையும் காணலாம்.
DC vs MI போட்டியின் போது டெல்லியில் வானிலை எப்படி..?
⚡️Thunderstorm in Delhi and ThunderBoult is on the run 🏃♂️#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #DCvMI pic.twitter.com/IpK0MN0Scj
— Mumbai Indians (@mipaltan) April 11, 2025
2025 ஏப்ரல் 13ம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஐபிஎல் 2025 சீசனில் இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இன்று (11.04.2025) புழுதி புயல் காரணமாகவும், மழையின் காரணமாகவும் வீரர்களின் பயிற்சி தடைப்பட்டது. மேலும், 2025 ஏப்ரல் 12ம் தேதியான நாளையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றும் வீசும், இருப்பினும் டெல்லி வானிலை அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு குறைவு. ஞாயிற்றுக்கிழமை போட்டியின் போது டெல்லியில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025ல் டெல்லி அணி எப்படி..?
ஐபிஎல் 2025ல் எந்த போட்டியிலும் தோற்காத ஒரே அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளது.