MI vs LSG: பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!
ஐபிஎல் 2025 தொடரின் 45வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி இலக்கை துரத்திய போதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களில் சுருண்டது.

மும்பை vs லக்னோ
ஐபிஎல் தொடரில் (Ipl 2025) மும்பை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிரடியாக இலக்கை நோக்கி சென்ற லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்குள் யார் போக போகிறார் என தெரியாத அளவுக்கு அடுத்தடுத்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 45 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians) , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் (Lucknow Super Giants) பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.இப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரரான ரியான் ரிக்கல்டன 58 ரன்கள் விளாசி அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 12 ரன்களில் வெளியேறினார்.
பின்னால் வந்த வில் ஜாக்ஸ் 29 ரன்கள் எடுக்க சூரியகுமார் யாதவ் பிரமாதமாக விளையாடி 54 ரன்கள் குவித்தார். பின் வரிசையில் நமன் திர் 25 ரன்களும், கார்பின் போஸ்ச் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி தரப்பில் பந்து வீசிய மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ், டிக்வேஷ் ரதி, ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டம்
இதனைத் தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி களம் கண்டது. தொடக்க முதலே அடித்து ஆடுவதில் அந்த அணி வீரர்கள் கவனம் செலுத்திய நிலையில் விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ச் 34 ரன்களில் ஆட்டமிழக்க, எய்டன் மார்க்ரம் 9 ரன்களில் அவுட்டானார். நிக்கோலஸ் பூரன் 27 ரன்களிலும், ஆயுஸ் பதோனி 35 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் சொதப்பினார். அவர் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறத் தொடங்கியது. 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 103 ரன்கள் குவித்தது.
இதனால் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இரண்டாம் பாதியில் மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. இறுதியாக 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய லக்னோ அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் மற்றும் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றது.